ஆளும்கட்சிக்கு வளைந்துகொடுக்கும் அதிகாரி: தேர்தல்அறிவிப்பு – ராமதாஸ் காட்டம்!

Must read

சென்னை:
ள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதிலேயே, தேர்தல் ஆணையர் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பது தெரியவருவதாக பாமக தலைவர் ராமதாஸ் காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ramdos
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன், உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாலை 6.30 மணிக்கு பிறகு தான் அறிவித்தார்.  அட்டவணை வெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் அதாவது, அடுத்த நாள் காலை 10.00 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டடு இருப்பது  எதிர்க்கட்சிகளை திணற வைக்க வேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
இரவோடு இரவாக தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அடுத்த நாள் காலையிலேயே வேட்பு மனுத் தாக்கலைத் தொடங்கும், ‘‘விடிஞ்சா கல்யாணம்… புடிடா பாக்கு வெற்றிலையை’’ கலாச்சாரத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மட்டும் தான் கடந்த 5 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்திற்கு நன்றாக தெரிந்த ஒன்றாகும்.
அவ்வாறு இருந்தும் தேர்தல் அட்டவணையை சில நாட்கள் முன்பாக வெளியிட ஆணையம் முன்வராததன் மர்மம் விளங்கவில்லை.
மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றைவிட உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் குறைந்தவை தான் என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை மிகவும் சிக்கலானதாகும்.
மக்களவைத் தேர்தலுக்கு 39 வேட்பாளர்களையும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 234 வேட்பாளர்களையும் தேர்வு செய்தால் போதுமானது ஆகும்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் என்பது மொத்தம் 1,32,058 பதவிகளுக்கு நடைபெறுகின்றன. இவற்றில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,820 உறுப்பினர் பதவிகள், 31 மாவட்ட ஊராட்சிகளில் 919 உறுப்பினர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6471 உறுப்பினர்கள் என 20,220 பதவிகளுக்கு கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறவிருக்கின்றன.
இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொண்டர்களின் மனுக்களை ஆய்வு செய்து வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது இமாலயப் பணியாகும்.
தற்கு குறைந்தபட்சம் 10 நாட்களாவது அவகாசம் தேவை. ஆனால், அந்த அவகாசம் வழங்கப்படவில்லை.
உள்ளாட்சி பதவிகள் தொடர்பான இட ஒதுக்கீட்டுப் பட்டியல் ஒருநாள் முன்புதான் வெளியிடப் பட்டது. கடந்த தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அது 50% ஆக அதிகரித்திருக்கிறது.
இதனால் ஒவ்வொரு பதவியும் எந்த பிரிவினருக்கு என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஊரகப் பகுதிகளில் இது குறித்த புரிதல் ஏற்படுவதற்கே இன்னும் ஒரு வாரம் ஆகும்.
இந்த நிலையில், ஓரிரவு அவகாசத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க வேண்டும் என்பது முறையல்ல. எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான் இத்தகைய துரோகம் இழைக்கப்படுகிறது.
ஆளும்கட்சிக்கு உள்ளாட்சி பதவிகள் தொடர்பான இட ஒதுக்கீட்டுப் பட்டியல் பல வாரங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. அதனடிப்படையில் ஆளுங்கட்சியினர் வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து விட்ட நிலையில், மற்ற கட்சிகளுக்கு எந்த அவகாசமும் தராமல் தேர்தல் அட்டவணையை வெளியிட்டிருப்பதில் இருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தேர்தல்கள் நியாயமாக நடைபெற வெளிமாநில அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக அழைக்கும் வழக்கம் கடந்த தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த தேர்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 37 இ.ஆ.ப. அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுவார்கள் என்றும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஒரே ஒரு தேர்தல் பார்வையாளர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையர் சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழகத்திலுள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளால் மாநில அரசை பகைத்துக் கொள்ள முடியாது எனும் போது, இந்த பார்வையாளர்கள் ஆளுங்கட்சினரின் தேர்தல் முறைகேடுகளை தடுப்பர் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 5000 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரே ஒரு பார்வையாளரை நியமிப்பது போதுமானது அல்ல. ஆளுங்கட்சியின் வேட்பாளர்கள் விருப்பம் போல முறைகேடுகளில் ஈடுபடவே இந்த ஏற்பாடுகள் வழி வகுக்கும் என குற்றஞ்சாற்றுகிறேன்.
ஆளுங்கட்சிக்கு வளைந்து கொடுக்கும் அதிகாரி தலைமையிலான தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தாது என்பது தேர்தல் அறிவிப்பிலேயே உறுதியாகி விட்டது.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலைமை வாக்குப்பதிவு அதிகாரியாக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும்;
2 ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வெளிமாநில இ.ஆ.ப. அதிகாரியை பார்வையாளராக நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் மத்திய துணை இராணுவப் படைகளை அதிக எண்ணிக்கையில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

More articles

Latest article