ஜல்லிக்கட்டுக்கு சசிகலாவா..? மக்கள் கோபம்

Must read

சென்னை,

டந்த இரண்டு வருடங்களாக தடைபட்டு கிடந்த ஜல்லிக்கட்டுக்கான உரிமையை இந்த ஆண்டு பெற்று தந்தது தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்பது உலகறிந்த விசயம்.

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு நடைபெற்ற அகிம்சை போராட்டத்தின் விளைவாகவே, மத்திய அரசும், தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை உருவாக்கியது. தற்போது, அந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது இதுகுறித்து அரசு கெசட்டில் அறிவிப்பு வெளியானதும் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தர சட்டமாகிவிடும்.

இந்நிலையில் மாணவர்கள் போராடி பெற்ற வெற்றிக்கு உரிமை கொண்டாடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைக்க துரித கதியில் வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த செயல் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் மட்டுமல்லாது உலக தமிழர்களி டையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர் ராகவன் தலைமையிலான நிர்வாகிகளும்,

வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும்,

அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும் தனித்தனியே நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்தத் தேவை யான நடவடிக்கைகளை துரிதமாக (!) எடுத்ததாக சசிகலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தலைமையேற்று தொடங்கி வைத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.  இதையேற்று சசிககலா ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் இயற்ற அலங்காநல்லூர் சென்ற தமிழக முதல்வரை, அவ்வூர் மக்கள்  அனுமதிக்க மாட்டோம் என கூறியதால், மதுரையில் இருந்து திரும்பினார் பன்னீர். பின்னர்,  அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக்கொள்ளலாம் என கூறினார்.

ஆனால், தமிழக முதல்வரை திருப்பி அனுப்பியதில் சசிகலாவின் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் தற்போதுள்ள  இரட்டை அதிகார மையங்களின் போட்டியால், பன்னீர்செல்வத்திற்கு  புகழ் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தின் விளைவாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.  இந்த நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அவர்கள் கட்சியின்,  உட்கட்சி அரசியல் எப்படியோ போகட்டும். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற சசிகலா காரணம் என்ற பிம்பம் கட்டமைத்து உருவாக்கப்படுவது, தமிழக மாணவர் புரட்சிக்கே ஏற்பட்ட இழுக்கு என மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவர கோரி, வரலாறு காணாத அளவில்  மாணவர் புரட்சி வெடித்த போது, அமைதியாக அபிராமி தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தவர்  முதல்வர் பன்னீர்செல்வம் என்றால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தவர் சசிகலா.

ராயப்பேட்டை அதிமுக ஆபீசில் மக்கள் நாயகன் எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்த வேளையில்தான், மெரினாவில் மக்கள் புரட்சி பூகம்பமாய் வெடித்துக்கொண்டிருந்தது.

கத்தி கூப்பிட்டால் கூட காதில் வந்து விழும் தூரத்தில் இருந்த சசிகலாவுக்கு, வங்கக் கடல் ஓசையை கூட அமுக்கி எழுந்த மக்களின் கதறல் கேட்கவில்லை

நாலு நாள் கத்திவிட்டு கலைந்து போய்விடுவார்கள் என்பதுதான் சசிகலாவின் யூகமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், மக்கள் போட்ட வியூகமோ வேறு. நாளுக்கு நாள், கடல் அலையை மிஞ்சும் வகையில் வந்தது கூட்டம். இதை பார்த்த பிறகுதான் அதிமுகவுக்குள் ஏற்பட்டது ஆட்டம்.

அவசர சட்டம் வேண்டும் என்பதைய மறந்து, எந்தவித அவசரமும் காட்டாமல், பொங்கலுக்கு 3 நாட்கள் இருந்த நிலையில், ஜனவரி 11ந் தேதிதான், மோடிக்கு கடிதமாக எழுதியிருந்தார் சசிகலா.

முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதேபோன்ற கடிதத்தை 2 நாட்கள் முன்பாக எழுதிய பிறகு வந்த ஞானோதயம் இது.

இங்கும் அதிகார போட்டிதான் முன்னிலையில் இருந்ததே தவிர ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் கிடையாது.


ஜல்லிக்கட்டு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்படும் முன்பே, “ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற உள்ள நிலையில், மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்பது மற்றும் உங்களின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட பொறுப்புகளை உணர்ந்து போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று அறிக்கையில் பாடம் நடத்தினார் சசிகலா.

இந்த அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை.

சின்னம்மா, சின்னம்மா, ஓ.பி.எஸ்ச எங்கம்மா.. என்ற கோஷம்தான் மெரினாவில் வைரலானது.

இந்த நிலையில்தான் ஜனவரி 23ந் தேதி மெரினாவில் மாணவர்கள் மீது போலீசார் மூலம் கடும் தடியடி நடத்தப்பட்டது.

தமிழகமே அல்லோகலப்பட்டது. வீதிக்கு வீதி மாணவர்களுக்கு ஆதரவாக பெண்களும் களமிறங்கி னர். ரத்த ஆறே ஓடியது என்று கூட சொல்லும் அளவுக்கு, சென்னை, கோவை, அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் மண்டை உடைக்கப்பட்டது.

அந்த அல்லோகல நாளில் ரஜினி, லாரன்சிடமிருந்து கூட அமைதி காக்க கோரிக்கை வந்தது, ஆனால், ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த சசிகலா அமைதியாகவே இருந்தார்.

ஆளும் கட்சி தலைமை என்ற வகையில் நடந்த தடியடி அடக்குமுறைக்கு சரி பாதி பங்குதாரர் ஆனார்.

ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக சட்டம் இயற்ற முடியும் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மாநில அரசு.  அறிவுரை சொல்லாமல் இருந்தது ஆளும் கட்சியின் தலைமை.

மாணவர்கள் புரட்சிக்கு பிறகு ஒரே வாரத்தில் அத்தனையும் நடந்து முடிந்தது. மூன்று வருடமாக தூங்கிய ஆளும் அரசை ஒரே வாரத்தில் தட்டி எழுப்பியது மக்களின் போர்ப் பறை.

இதையும் செய்யாமல் விட்டிருந்தால் ஆட்சிக்கே ஆபத்து என்ற நிலையில்தான் அவசரமாக டெல்லி சென்று நடவடிக்கை எடுத்தார் முதல்வர்.

கட்சியின் அடிநாதமான பெண்களே வீதிக்கு வந்துவிட்டதால் இத்தோடு கட்சியின் காலம் முடிந்துவிடுமோ என்ற பதற்றத்தில் ஒத்துழைத்தார் சசிகலா.

இப்படி ஆட்சியாளர்களிடம் நடந்த மாற்றங்கள் அனைத்துமே சுய லாபத்தின் கணக்கு.

மாணவர்கள் போராட்டம் மட்டுமில்லை என்றால், ஜல்லிக்கட்டு கனவாக கலைந்திருக்கும்.

பனி, மழை, வெயில் என மூவகை சீதோசணத்திலும் ஒரு அடி கூட நகராமல் அறச் சீற்றம் காட்டிய மக்கள், போலீசாரின் கண்ணீர் புகை குண்டுகளுக்கும் கலங்கவில்லை.

தடியடி வாங்கவும் தயங்கவில்லை. இது மாணவர் புரட்சி. மாணவர்கள் வெற்றி. எல்லாம் முடிந்த பிறகு வரும் தமிழ் சினிமா போலீஸ் போல….

இப்போது வந்து ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைப்பது பக்கா அரசியல்.

இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம்.

சசிகலா நினைத்துக்கொண்டிருப்பதை போல இது அரசியல் லாபத்திற்கு பயன்படாது.

மாறாக இளம் சமூகத்தின் ஒட்டுமொத்த கோபத்தையும் தன்மீது திருப்பிக்கொள்ளப்போவதுதான் நிதர்சனம்.

More articles

Latest article