சென்னை: சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர்,  அவர் யாரையும் கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ முடியும் என்று கூறிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறினார்.

நள்ளிரவு சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில்  தங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சசிகலா வரும் வழியில் சில இடங்களில் தடைகள் இருந்தது. நாங்கள்  அதையும் மீறி தான் வந்திருக்கிறோம். சசிகலா முதலில் வந்த காரில் ஏசி கோளாறு ஏற்பட்டது. எனவே தான் அ.தி.மு.க. நிர்வாகி சம்பங்கியின் காரில் சசிகலா வந்தார். அதற்காக தட்சணாமூர்த்தி, சம்பங்கியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இவர்களைப் போல் உண்மைக்காக போராடக்கூடியவர்கள் அ.தி.மு.க.வில் நிறையபேர் இருக்கிறார்கள். “அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல் உள்ளனர். ஸ்லீப்பர் செல் எம்எல்ஏவாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . அதிமுக நிர்வாகியாக கூட இருக்கலாம்.பொறுத்திருந்து பாருங்கள்.

அ.ம.மு.க. தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்க தான். அ.தி.மு.க.வை மீட்ட பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அ.தி.மு.க.வில் தொடர்வார்களா என்பது குறித்து பேசுவோம். கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது என்றவர்,  புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள  சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தற்போதும் சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர்,, அவர்  ஒருவருக்கு பதவி நியமனம் செய்யயும் , பதவியில் இருந்து நீக்கமுடியும்.

தேர்தல் ஆணையம் கட்சியின் பெயரையும், சின்னத்தை பற்றித்தான் விசாரித்துள்ளது. ஆனால், எப்போதும் கட்சிக் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என தெரிவித்தார்.

ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா கூறுகிறார். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். எங்களை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க. தான் என்றார்.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது” என்றவர்,  அதிமுக பொதுக்குழு கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ, பொதுச் செயலாளருக்கு தான் அதிகாரம் உள்ளது. சசிகலாதான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக் குழுவை கூட்ட பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கே உரிமை உண்டு ” என்றார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.