சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றினைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலா அதிமுகவினரை  அழைக்கவில்லை  என  தெரிவித்துள்ளார்.

இன்று  ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறத. அவரது பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ் – ஈபிஎஸ், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன், மெரினாவில் உள்ள நினைவிடத்திலும் மரியாதை செய்தனர். தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தனர்.

அதுபோல, சிறையில் இருந்து விடுதலையான  ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும்  தனது தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தி, தொண்டர்களிடையே உரையாற்றினர். அப்போது, உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவோம். அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். விரைவில் தொண்டர்களையும் சந்திப்பேன் என்று கூறினார். முன்னதாக அவர் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலும் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது  குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அப்போது, சசிகலா அதிமுகவினரை அழைக்கவில்லை என தெரிவித்ததுடன், அவரது அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது; அவர் அமமுகவினரைத் தான் அழைத்துள்ளார் என்றவர், சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் உள்ளது என்றார்.