அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்று பொருள்படும்படி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமித்து அதரவு அளிக்க, இது குறித்த தீர்மானம் நிறைவேறியது.

ஆகவே சசிகலா முதல்வராவது உறுதியாகிவிட்டது. நாளை அல்லது 9ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு கட்சதலைவர்கள் இது குறித்து விமர்சித்து வருகிறார்கள். தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் அ.தி.மு.கவின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் அ.தி.மு.க.வின் முடிவை விமர்சித்துள்ளார்.

அவர் “ கடந்த காலங்களில்தமிழக முதல்வர் இருக்கைக்கு காமராஜர், அண்ணா போன்றவர்கள் பெருமை சேர்த்தனர்” என்று தெரிவித்த சிதம்பரம், “இந்த விசயத்தில் அதிமுகவினரும் மக்களும் இரு வேறு துருவங்களாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் முழுமனதாக சசிகலாவை தேர்ந்தெடுக்கும் நிலையில், சிதம்பரம் இப்படிச் சொல்லியிருப்பது, அக்கட்சியின் முடிவை மக்கள் ஏற்கவில்லை என்று குறிப்பிடுவதாக ஆகிறது.

அதே நேரம், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், “புதி முதல்வரைத் தேர்ந்தெடுக்க அக் கட்சியினருக்கு உரிமை இருக்கிறது” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.