சசிகலா முதல்வராகிறார்?

Must read

சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, இரண்டாம் கட்ட தலைவர்கள் வற்புறுத்தி வரும் நிலையில், தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். தமிழக முதல்வராக மட்டுமின்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் ஜெயலலிதா இருந்தார். ஆகவே  அவருக்கு அடுத்து முதல்வர் மற்றும் கட்சி பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இறுதியில் ஓ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வரப்போவது யார் என்பது குறித்து பல்வேறு விதமான யூகங்கள் கிளம்பின.  செங்கோட்டையன், தம்பிதுரை உட்பட பலரது பெயர்  அடிபட்டன. ஆனால் இவர்கள் இருவர் உட்பட, இண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் இன்று சசிகலாவை சந்தித்து, அவரே பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவேண்டும் என்று கோரினர்.

ஆகவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
“தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சி, ஆட்சி இரண்டுக்கும் ஒரே தலைமை இருப்பதே வழக்கம். அதன்படி, கட்சி பொதுச்செயலாளராக வர இருக்கும் சசிகலா, தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்பார்” என்று ஒரு செய்தி வலம் வருகிறது.
மேலும், “முதல்வராக பொறுப்பேற்பவர் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆனால் போதும். ஆகவே சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார். ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவார்” என்று அதிமுக தரப்பில் பேசப்படுகிறது.
இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக சட்டமன்ற செயலாளர் ஜலாலுதீன், இன்று மாலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.  சட்டமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டுவது தொடர்பாக  இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
“இதிலிருந்தே சசிகலா முதல்வராவது உறுதி என்பது தெரிகிறது.  மிக விரைவில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூடி, சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள். அதன் பிறகு சசிகலாவுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அடுத்ததாக சட்டசபையைக் கூட்ட வேண்டியிருக்கும். அதையெல்லாம் திட்டமிட்டே தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை  தமிழக சட்டமன்ற  செயலலாளற் ஜலாலுதீன் சந்தித்து ஆலோசித்தார் ” என்று கோட்டை வட்டாரத்திலும் பேச்சு அடிபடுகிறது.

More articles

Latest article