கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, “அதிமுக பொதுச் செயலாளராரன வி.கே. சசிகலா தமிழக முதல்வராவதை எவராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைறும் நிலையில் இவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மூன்றாவது முறையாக கூடுகிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தலைமை வகிக்கிறார்.

இன்றைய கூட்டத்தில், சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் உலவுகின்றன.

இந்த நிலையில், கர்நாடக மாநில அ.தி.மு.க. பொதுச்செயலாளரான புகழேந்தி தெரிவித்துள்ளதாவது,:

“இன்று சென்னையில் இன்று நடக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா, முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

புகழேந்தி

அதிமுகவின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார்.  கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருப்பதே நல்லது. அப்போது தான் தமிழகம் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும், அதிமுக சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் சிறந்த முறையில் தீர்வு காண முடியும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதமும், பொதுச் செயலாளர் சசிகலா ஒரு கடிதமும் அனுப்ப வேண்டியிருந்தது.

பன்னீர்செல்வத்தை சந்தித்த மோடி, சசிகலா அனுப்பிய 49 எம்.பி.க்களை சந்திக்காத நிலை ஏற்பட்டது. இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. சசிகலாவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தே எம்.பி.க்களை சந்தித்து இருப்பார்.

ஆகவே, சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.