உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

நடிகர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எனது அப்பா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இருப்பினும், 10 நாள்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயகுமார், ரவி கிரண், சந்திரகாந்த் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட உதவிப் பணியாளர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களுடைய அர்பணிப்பான பணி, என் தந்தை குணமடைந்து நல்ல உடல்நலத்துக்கு திரும்ப உதவியாக இருந்தது. அவருடைய முழு சக்தியையும் மீண்டும் பெற்று முழுவதுமாக குணமடைதற்கு அடுத்துவரும் 15 நாள்களுக்கு அவர் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சினிமா மற்றும் அரசியல் வட்டார நண்பர்கள் மற்றும் அப்பாவின் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் அப்பா குணமடைவதற்கு பிரார்த்தனை செய்ததற்கு நன்றி.

இது நமக்கு கொரோனா இன்னமும் ஆபத்தானதுதான் என்பதையும், நாம் பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்பதையும் காட்டுகிறது. உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பாதிப்படையும்போதுதான் நாம் கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்கிறோம். எப்போதும் முகக் கவசம் அணியுங்கள். அவசியத் தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.