லகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை பூரி கடற்கரையில் உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்  இடம் பிடித்துள்ளார் பிரபல மணல் சிற்ப ஓவியர் சுதர்சன் பட்நாயக்.

ஒடிஷாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இவர் பூரி கடற்கரை பகுதியில் மணல் சிற்பம் உருவாக்கி, அதன் மூலமாக உலக மக்களுக்கு தகவல்களை கூறி வருகிறார்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டை

தற்போது பூரி கடற்கரையில் இவர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய மணல்கோட்டை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க மணல் சிற்ப கலைஞர் டெட் கடந்த 2015-ம் ஆண்டில் மியாமி கடற்கரையில் 45 அடி 10 அங்குலம் உயரத்துக்கு மணல் கோட்டையை உருவாக்கினார். இதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.

அந்த சாதனையை தற்போது ஒடிஷாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் முறியடித்துள்ளார்.

கின்னஸ் ரெக்கார்டுடன் ஓவியர் சுதர்சன் பட்நாயக்

ஒடிஷா மாநிலத்தின் பூரிகடற் கரையில் பட்நாயக்கும் அவரது 45 மாணவர்களும் இணைந்து 9 நாட்களில் பிரமாண்ட மணல் கோட்டையை உருவாக்கி உள்ளனர்.

உலக அமைதியை கருப்பொருளாக வைத்து எழுப்பப் பட்டுள்ள இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும்.

மணல் சிற்பத்தை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இந்திய பிரதிநிதி ஸ்வப்னில், சாதனையை அங்கீகரிப்பதற்கான சான்றிதழை நேற்று அவரிடம் அளித்தார்.

சுதர்சன் பட்நாயக் தனது ஏழாவது வயதிலிருந்து மணலில் சிற்பம் செதுக்குவதைத் தொடங்கினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளார். உலக அளவில் நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பல்கேரியாவில், ’விளையாட்டு உலகம் மற்றும் ஒலிம்பிக் சின்னமும்’ என்ற மணல் சிற்ப ஓவியப் போட்டி நடைபெற்றது.

அப்போது, ’போதைப் பழக்கம் விளையாட்டை கொன்றுவிடும்’ என்ற கருத்தை தனது சிற்பத்தின்மூலம் வெளிப்படுத்தியதற்காக முதல் பரிசாக தங்கப்பதக்கத்தை சுதர்சன் பட்நாயக் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.