டெல்லி:

பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் அதிகமான தொகை டெபாசிட் செய்த அரசியல் கட்சிகளின் பட்டியலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். டிசம்பர் 30ம் தேதி வரை இது அமலில் இருந்தது. இந்த 50 நாட்களில் 15 அரசியல் கட்சிகள் ரூ.167 கோடி ரூபாயை வங்கியில் டொபசிட் செய்துள்ளது. இதில் 104 கோடி ரூபாயுடன் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இதர 14 கட்சிகள் சேர்ந்து ரூ. 63 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இத்தகவலை வருமான வரித் துறையில் நிதி நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 250 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 6 தேசிய கட்சிகள் மற்றும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் 9 மாநில கட்சிகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. பாஜ ரூ. 4.75 கோடி, காங்கிரஸ் ரூ.3.2 கோடி டெபாசிட் செய்துள்ளது. நாடு முழுவதும் இதர கட்சிகள் ரூ. 80 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரை டெபாசிட் செய்துள்ளது.

மேலும், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி, அதிமுக, சமாஜ்வாடி கட்சி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீது வருமான வரித் துறை அதிக கவனம் செலுத்தியது. திமுக, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கண்டு கொள்ளவில்லை.