மும்பை

டிகர் சல்மான்கான் தனது சமீபத்திய படமான டியூப்லைட் தோல்விக்கான நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு ஈடுகட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சல்மான்கான் நடித்து ரம்ஜானை முன்னிட்டு வெளியான டியூப்லைட் இந்திப்படம், மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியானது.  ஆனால் தற்போது தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.  இதுவரை அகில உலக அளவில் ரூ 114.5 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது.  கூட்டம் குறைந்து வருவதால் விரைவில் தியேட்டர்களை விட்டு படம் தூக்கப்படும் என சொல்லப் படுகிறது.  இதனால் ஏற்பட்ட கடும் இழப்பை சல்மான்கான் ஈடுகட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது பற்றி கோமல் நகாதா என்னும் வர்த்தக ஆய்வாளர், ”சல்மான்கான் தனது விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தான் ஈடுகட்ட ஒப்புக் கொண்டுள்ளார்.  இது ஒரு அருமையான செய்கை.  இவர்தான் மனிதன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.  இதன்படி ரூ 55 கோடி வரை சல்மான் தர வேண்டி வரும்.

சல்மான்கான் டியூப்லைட் படம் விமர்சகர்கள் நடுவில் நல்ல வரவேற்பு பெற்றதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளார்.  இது பற்றி ஒரு பேட்டியில், ”விமர்சகர்கள் டியூப்லைட் படத்தை மிகவும் விரும்புகின்றனர்.  நான் முதலில் இது அவர்களுக்கு பிடிக்காது என பயந்தேன்.  ஆனால் அவர்கள் இந்த படத்தைக்கண்டு மகிழ்ந்தனர்.  இந்த படம் ஏன் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமே,  தற்போது வெறும் பாட்டு, நடனம் மட்டுமே படங்களில் நிறைந்துள்ளது.  அதற்கு நடுவில் இது போல கதையம்சம் கொண்ட படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.   டியூப்லைட் ஒரு உணர்ச்சி பூர்வமான திரைப்படம்,  எந்த ஒரு கல்நெஞ்சக் காரராக இருந்தாலும் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களால் கண்ணீரை அடக்க முடியாது.  இது உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி, சகோதர சகோதரிகள் போன்ற குடும்ப உறுப்பினர்களுடன் பார்க்க வேண்டிய படம்” என சல்மான்கான் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த வார இறுதியில் வெளியான ஸ்ரீதேவி நடித்த மாம், ஸ்பைடர்மேன் ஆகிய இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் டியூப்லைட் தோல்வி பெற்றது என்பதே உண்மை.