சேலம்: கருணாநிதி சிலை வைக்க 90ஆண்டு கால மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இது மாடர்ன் தியேட்டர் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ் திரையுலகம் சார்பில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இந்த நிலையில், கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற திரையுலக ஜாம்பவான்களை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை, கருணாநிதி சிலை வைக்க மிரட்டல் விடுத்துள்ளது, திரையுலகினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாகவும், இதனால்,   சேலம் ”மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் வளைவை கேட்டு கலெக்டர் மிரட்டுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,” என, சேலம் மாடர்ன் தியேட்டர் நில உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd). சேலம் ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் அமைந்திருந்தது.  தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது .

தமிழக திரை உலகின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திகழ்ந்து வந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

குறிப்பாக தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் , முதல் கலர் படம், முதல் இரட்டை வேடம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் விளம்பரப் படம், தமிழ்நாட்டின் முதல் ஆங்கிலப் படம் என பல்வேறு சிறப்புகளை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் ஆளுமைகளை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான். வெற்றிகரமாக பல படங்களை தயாரித்தாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் பிற்காலத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தது. டி.ஆர்.சுந்தரத்தின் இறப்பிற்கு பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் முழுமையாக மூடப்பட்டது.

இத்தகைய சிறப்புமிக்க மாடர்ன் தியேட்டர் அமைந்திருந்த இடத்தில் தற்போது வர்மா கன்ஸ்டிரக்ஷன் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தபோது, அவரது தந்தையும் தமிழகத்தில் முன்னாள் முதல்வருமான கருணாநிதி திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலை பார்வையிட்டு அதனுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதோடு முதல்வர் ஸ்டாலின் அவரது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.

இந்த நிலையில் சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ளதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையால் கல் நடப்பட்டுள்ளது.  1935ம் ஆண்டு முதல் அங்கு மாடர்ன் தியேட்டர் நிறுவனம் இயங்கி வந்த நிலையில், சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு, கருணாநிதி சிலை வைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, மாரடர் தியேட்டர் நுழைவு வாயில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் இருப்பதாக கூறி, அதை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இது இந்த பகுதி மக்கள் மட்டுமின்றி திரையுலகினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து   செய்தியாளர்களை சந்தித்த வர்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜயவர்மா, “கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சேலம் வந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். அன்று இரவு மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலமாக அழைத்து முதல்வர் சந்திக்க அழைத்ததாக கூறினார். அப்போது, முதல்வர் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என கேட்டார்.

குடும்பத்தினருடன் கலந்து பேசி விட்டேன் முடிவு சொல்வதாக கூறினேன். ஆனால், இதை வலியுறுத்தி  பல்வேறு தரப்பினர் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் அழைத்துப் பேசினர். இது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில் மட்டும் அளவு எடுக்கப்பட்டு இதை அரசுக்கு சொந்தமான இடம் என கல் நடப்பட்டது.

கடந்த ஆண்டு அரசு வழங்கிய வரைபட ஆவணத்தில் நுழைவாயில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. ஆனால் தற்போது வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அடக்குமுறையை கையாண்டு கல் நாட்டி உள்ளனர்.

சட்டப்படி, முறையான நவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இந்த செயலில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரடியாக அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும், சிலை வைக்க இடம் தராததால் இது போன்ற காரியங்களில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தங்களுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தையும் வீட்டு வசதி வாரியத்தின் நிலம் என்று கூறி முடக்கி உள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போது, மாடர்ன் தியேட்டர் நினைவு சின்னத்தை பராமரிக்குமாறு தங்களிடம் கேட்டுக் கொண்டார். அதற்காக இன்று வரை பழமை மாறாமல் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை பராமரிப்பு செய்து வருகிறோம். மேலும், அந்த இடத்தில் மாடர்ன் தியேட்டர் நினைவாக சம்மந்தப்பட்ட இடத்தில் அதனை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரத்தின் சிலை மற்றும் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினிமா தயாரிக்கும் நினைவு பொருட்களை அருங்காட்சியகமாக வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.

இத்தகைய சிறப்புமிக்க மாடர்ன் தியேட்டர் அமைந்திருந்த இடத்தை, கருணாநிதி சிலை வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக  சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ளதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையால் கல் நடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ உதவி: நன்றி MNT News

https://www.youtube.com/watch?v=yL0a46XIogU