சென்னை:  “பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!”  என தமிழ்நாடு  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதி களிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும்  சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜன.1, 2018 முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் https://crstn.org என்ற இணையதளம் மூலம் மாநில முழுவதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2018-க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படின் https://crstn.org என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களே இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.