சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கடல்லி கலந்துள்ள   கச்சா எண்ணெய் கழிவுகளை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.18-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து எண்ணூர் ருகே  கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடுமாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், சென்னைபெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்தில் இருந்துகழிவுகள் வெளியேறியதாக தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,  மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் சத்யஜித்: எண்ணெய் கசிவுதொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. பரிசோதனைக்கூட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இறுதி ஆய்வறிக்கை இன்னும் தயாராகவில்லை. அடுத்த விசாரணை நாளில், இறுதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றவர்,  எண்ணெய் கசிவால் கடல் ஆமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கடலோரப் பகுதியில் உள்ள பல்லுயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிட தமிழக அரசு சார்பில் சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  கடலில் கலந்துள்ள  எண்ணெய்கழிவுகளை அகற்ற கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக தொழிற்சாலையில் பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் படர்ந்த பகுதிகளைகணக்கிடுவது, அறிவியல்பூர்வமாக எண்ணெயை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம், நீர் மாசு நீக்கம் போன்றவை குறித்து அறிவதற்கு ஐஐடியிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து,  சிபிசிஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம்:  எண்ணெய் கழிவுகளை அகற்ற சிபிசிஎல்நிறுவனம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில்,  சிபிசிஎல் சார்பில் எண்ணெய் கழிவு அகற்றும் பணியில் 75 படகுகள், அதில் தலா 5 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், மேலும்   எண்ணெய் படலம் பரவாமல் இருக்க 1,400 மீட்டர் நீளத்துக்கு ‘மிதவை பூம்கள்’ ஏற்பாடு செய்யப்பட்டு, 625 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஸ்கிம்மர் உறிஞ்சும் கருவி உள்ள நிலையில், ஒன்றை பயன்படுத்தி வருகிறோம். இது மெல்லிய எண்ணெய் படலத்தை அகற்றும் தன்மை கொண்டது என்று கூறினார்.

மேலும், இந்த பணியில் மற்ற நிறுவனங்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும்,  எண்ணெய் உறிஞ்சும் 20 ஆயிரம் பட்டிகள் தயாராக உள்ளன. அதில் 9,700 பட்டிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 4 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு எண்ணெய் கழிவு படிந்த 20 டன் கடல் மண் அகற்றப்பட்டுள்ளது. 7,260 லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதில் 99 சதவீதம் நீர் நிறைந்திருக்கும். 17-ம்தேதிக்குள் 95 சதவீத கழிவுகள் அகற்றப்படும் என்றார்.

அத்துடன்,  மணலி பகுதியில்,  21 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சிபிசிஎல் மட்டுமல்லாது, மற்ற நிறுவனங்களையும், எண்ணெய் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியில் மீனவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திறன் பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டமுகமைகள்தான் இதுபோன்ற எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். இதில் மீனவர்களை பயன்படுத்த கூடாது. இப்பணிகளில் ஈடுபடுத்தினால், அவர்களது உடல்நலன் பாதிக்கப்படும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட  தேசிய பசுமை தீர்ப்பாய  அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘‘டிசம்பர் 17-ம் தேதிக்குள் 100 சதவீதம் எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். 18-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.