குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்தினார்.

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா-வை 2014 ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

2018 ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையே கிரிமிய கடலில் 30000 கோடி ரூபாய் செலவில் 19 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல பாலமும் ரயில் பாலமும் அமைக்கப்பட்டது.

உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து தென்பகுதியில் உள்ள ரஷ்ய படையினருக்கு தேவையான தளவாடங்களை அனுப்பும் முக்கிய வழித்தடமாக இது இருந்து வந்தது.

அக்டோபர் 8 ம் தேதி இந்த பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதன் ஒரு பகுதியை தகர்த்தது. இது ரஷ்யா மீதான தீவிரவாத தாக்குதல் என்று ரஷ்யா அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்தப் பாலத்தை சீரமைக்கும் பணியை ரஷ்யா மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இந்த பாலத்தின் மீது மெர்சிடிஸ் காரை ஓட்டிவந்த அதிபர் புடின் பாலத்தின் இருவழித்தடத்தில் ஒரு வழித்தடம் முற்றிலும் சேதமடைந்திருப்பதை அடுத்து ஒருவழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதை பார்வையிட்டார்.

ரயில் மற்றும் வாகன போக்குவரத்து பாலம் விரைவில் சீர்செய்யப்படும் என்று கூறிய அதிபர் புடின் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நிலப்பரப்பு வழியாக கிரிமியா – ரஷ்யா இடையே விரைவில் தரை வழி தடம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

புட்டினுக்கு கை கால் உதறல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் மூலம் அவதிப்பட்டு வருகிறார் என்று சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் விளாடிமிர் புடின் தாமே காரை ஒட்டிச் சென்று குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட வீடியோ வெளியாகி ரஷ்யா குறித்து பரப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.