திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் சிவனின் அக்னிஸ்தலமான  திருவண்ணாமலையில் மீது இன்று மாலை 6மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய் தத்துவத்தை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இன்று மாலை கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படும் நிலையில் முன்னதாக இன்று அதிகாலை கோயிலில் பரணி தீபம்  ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட  தீபத்தைக் கொண்டு மற்ற மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா முழக்கம் ஒலிக்க,  ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.  ஒன்றே பரம்பொருள் என்பதை உணர்த்தும் வகையில்  முதல் மடக்கை கொண்டு மற்ற மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பரணி தீபம் ஏற்றும்  நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  உள்பட அதிகாரிகள் மற்றும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து  இன்று மாலை  2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

அதற்காக நேற்று காலை கொப்பரை மற்றும் நெய், திரி போன்றவை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவை அங்குள்ள மலை உச்சியில் கொப்பரையில் ஊற்றி மகா தீபத்தை ஏற்றும் வகையிலான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த தீபத்திற்கு தயாராக இருந்த நிலையில், இன்று  மாலை 6 மணி அளவில் கோவிலில், தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விட்டனர். அப்போது,  அர்த்தநாரீஸ்வரர் வெளி வந்து காட்சி கொடுத்துவிட்டு  உள்ளே சென்றார்.

இதையடுத்து, சிவாச்சாரியார்கள்,   வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டி மகா தீபத்தை ஏற்ற உத்தரவு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து,  மலைமீது தயராக இருந்த  பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள்  அங்கு தயாராக  வைக்கப் பட்டிருக்கும் ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை ஏற்றினார். அப்போது மலையின் கீழே அமர்ந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

மகா தீபம் ஏற்றப்பட்டுள்ள கொப்பரையில்,  3,000 கிலோ பசுநெய் மற்றும்,  1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இடப்பட்டுள்ளது.  இந்த  தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் அணையாமல் எரியும்.  தீபத்தின் ஒளி இரவில் பல  கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.