மாஸ்கோ: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது ரஷ்யா.

ரஷ்ய நாட்டின் விளையாட்டு வீரர் – வீராங்கணைகள் ஊக்கமருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்தது என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் 15 மாத தடைவிதிக்கப்பட்டது. இதனால், அந்த ஒலிம்பிக்கில் ரஷ்யர்களால் கலந்துகொள்ள முடியவில்லை.

பின்னர், இதுகுறித்து நடைபெற்ற தொடர் விசாரணையில், சர்வதேச போட்டிகளில் ரஷ்ய நாட்டினர் பங்கேற்பதற்கு 4 ஆண்டுகள் தடைவிதித்து தீர்ப்பளித்தது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம்(டபிள்யூ.ஏ.டி.ஏ).

இதனால், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக், 2022ம் ஆண்டு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக், 2022ம் ஆண்டின் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆகியவற்றில் ரஷ்ய நாட்டினர் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டபிள்யூ.ஏ.டி.ஏ தீர்ப்பிற்கு எதிராக, சுவிட்சர்லாந்திலுள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது ரஷ்யா. இது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.