புதுடெல்லி: கடந்த காலங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் சம்பவங்கள் நடந்தது உண்மைதான் எனவும், ஆனால், தற்போதுதான் அவை விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம்பிஎஸ் பஜ்வா.

இந்த பிரிகேடியர்தான், கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த டைகர் ஹில்ஸ் பகுதியைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரிலும் பங்கேற்றவர்.

இவரின் தலைமையிலான படைப்பிரிவு, டைகர் ஹில்ஸ பகுதியைக் கைப்பற்றியதற்காக, அந்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்காக வீரதீர விருதையும் பெற்றது.

“ராணுவத்தில் பகுதி நிலைகளிலான சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் முன்பே நடத்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், அது இப்போதுதான் தேசிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றன. அந்த தாக்குதலின் பயன் விளைவு குறித்த தெளிவான புரிதல் இல்லாமலேயே” என்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் சம்பவத்தையும், தற்போது போன்றே பெரிய விளம்பரமாக்கியது நரேந்திர மோடியின் அரசு என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடத்தப்பட்ட 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் சம்பவங்கள் குறித்த விபரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ஆனால், ராணுவத்தையே இழிவுபடுத்தும் வகையில், அவற்றை வீடியோ கேம்கள் என்று விமர்சித்தார் பிரதமர் பொறுப்பிலிருக்கும் நரேந்திர மோடி.

அவரின் இந்த பொறுப்பற்ற விமர்சனம், முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவர்கள் தங்களின் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

இதில், கடந்த 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மேற்பார்வை செய்த, வடக்குப் படைப்பிரிவின் தலைவராக இருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹுடாவும் ஒருவர்.

“இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் ஒன்றும் ராணுவத்தில் புதிதாக நடப்பதல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

– மதுரை மாயாண்டி