பிவானி: நாட்டின் பிரச்சினைகளை எதிர்த்து குத்துவிட களத்தில் குதித்த குத்துச்சண்டை வீரர் நரேந்திரமோடி, அப்பாவி மக்களின் முகத்திலும், அவரின் பயிற்சியாளர் அத்வானியின் முகத்திலும் குத்தியதுதான் மிச்சம் என்று நயம்பட விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

குத்துச்சண்டைக்கு பெயர்பெற்ற ஹரியானா மாநிலம் பிவானியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

அவர் கூறியதாவது, “கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், வேளாண்மை அவலம், ஊழல் மற்றும் இன்னபிற கேடுகளை எதிர்த்து சண்டையிடப் போவதாய் சொல்லிக்கொண்டு, குத்துச்சண்டை வளையத்தில் குதித்தவர்தான் நம் குத்துச்சண்டை வீரர் நரேந்திர மோடி. ஆனால், முதலில் அவர் குத்துவிட்டது அவரது பயிற்சியாளரும் குருவுமான அத்வானியின் முகத்தில்.

பிறகு, அவரின் கவனம் பாவப்பட்ட விவசாயிகளின் பக்கம் திரும்பியது. கடன் சுமை உள்ளிட்ட பலவித இன்னல்களில் தவித்த அவர்களுக்கும் வலுவான குத்து விழுந்தது.

இதிலும் திருப்தியடையாத மோடி, சிறு குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை நோக்கி திரும்பி, தனது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவற்றின் மூலம், பெரிய குத்துவிட்டு அவர்களையும் வீழ்த்தினார்.

ஆக மொத்தத்தில், களத்தில் தான் யாரை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற புரிதலே இல்லாமல், 5 ஆண்டுகளை கழித்துவிட்டார் பிரதமர் மோடி. இப்போது, அவரால் பாதிக்கப்பட்ட மக்கள், அவரை வீட்டுக்கு அனுப்ப இந்த தேர்தலில் தயாராக இருக்கிறார்கள்.

இந்த பிவானி பகுதியில்தான் இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உருவானார். அவர் தற்போது, காங்கிரஸ் சார்பாக தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியும் அவரின் குழுவினரும், காங்கிரஸ் தலைவரையும் அவரின் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால், தரம் தாழ்ந்து தொடர்ச்சியாக விமர்சித்து வந்தபோதிலும், அதற்கு பதிலடியாக, பொறுப்புணர்ச்சியுடனும், கண்ணியத்துடனும், நயம்படவும் விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி என்பது கவனிக்கத்தக்கது.

– மதுரை மாயாண்டி