சென்னை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார்

xr:d:DAFaJkgOSsI:716,j:193354293,t:23030513

அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் 3 பயணிகள் கைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  அந்த 3 பேரையும் உடனடியாகப் பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பணத்தை எண்ணியபோது அதில் 3 கோடியே 99 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த  காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நெல்லை எக்ஸ்பிரசில் பணத்துடன் பிடிபட்டது புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. அவர்கள் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது., நெல்லையில் பணப்பட்டுவாடா செய்யப் பணம் எடுத்துச் சென்றதாகப் பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதையொட்டி திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம்,

”தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறையினர்தான் விசாரணை செய்வார்கள். பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள்”

என்று கூறி உள்ளார்.

தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,

“‛‛நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். அனைத்து பா.ஜ.க., வேட்பாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்,  வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.”

என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.