சென்னை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுவரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது அமைச்சர் தங்கம் தென்னரசு  வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சத்துக்குச் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைப்போல் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி, நண்பர் கே.எஸ்.பி.சண்முக மூர்த்தி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்குகளிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி அனைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில்  இந்த வழக்குகளில் விசாரணை நடத்திக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கக்கோரி காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

எனவே இவர்கள் அனைவரையும் சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வரவழைத்து படித்துப் பார்த்து இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி,

”சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கீழ்மை நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்டவர்கள் மீது தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது ஏன்?  திமுகவுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.  ஏற்கனவே பல வழக்குகளில் நாங்கள் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பைப் பெற்றுள்ளோம்”

எனக்கருத்து தெரிவித்துள்ளார்.