ஆபரண தயாரிப்பாளர் ஊக்குவிப்பிற்காக ரூ.900 கோடி நிதி வழங்க கோரிக்கை!

Must read

புதுடெல்லி: ஆபரண தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, ரூ.900 கோடி நிதித் தொகுப்பை வழங்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்.

தங்க ஆபரண துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, திறனை அதிகரிக்க உதவும் வகையில், மாதிரி தயாரிப்பு பட்டறை’யையும், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் ஒன்றையும் ஏற்படுத்துமாறு, இந்த கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது, “எங்களது உறுப்பினர்களில், 85% பேர் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், கைகளால் செய்யப்படும் தங்க நகை தயாரித்தல், வைரங்களை நறுக்கி மெருகேற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்கள் துறையானது உழைப்பு மிகுந்த, ஏற்றுமதி சார்ந்த ஒன்றாகும். இந்நிலையில், துறையை திறன் மிகுந்ததாக மாற்ற, ரூ.900 கோடி நிதி தொகுப்பு தேவை என, அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மாதிரி தயாரிப்பு பட்டறையை நிறுவுவதன் மூலம், திறன் மேம்பாட்டை அதிகரிக்க இயலும்” என்றார்.

More articles

Latest article