சென்னை,

மிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்றும், 8000 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தப்படும் என கூறினார்.

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அப்போது,  அவர் கூறியதாவது:-

1. 2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, 2017-18ஆம் ஆண்டில் 2,659 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மற்றும் 25 உயர்மட்டப் பாலங்கள் 1,254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

3. ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், பயிற்சிகள் அளிப்பதற்கும், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சி நடத்தி விற்பனை செய்வதற்கும் ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடங்கள் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 கட்டடங்கள் 600 கோடி ரூபாயில் கட்டப்படும்.

4. திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற “முழு சுகாதார தமிழகம்” என்ற இலக்கினை அடையும் வகையில், 2017-18 ஆம் ஆண்டில், தூய்மை பாரதம் இயக்கம் மற்றும் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 26.49 லட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள், தலா 12,000 ரூபாய் ஊக்கத் தொகையில் மொத்தம் 3,178 கோடி ரூபாயில் கட்டப்படும்.

5. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெற்றிகரமாக செயல்படுவதை மேம்படுத்தும் வகையிலும், கழிவுகள் அகற்றப்படும் முறைகளை நவீனப்படுத்தும் விதமாகவும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளாக, தெருவில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மூன்று சக்கர மிதிவண்டிகள் / தள்ளுவண்டிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் மின்கலம் மூலம் இயக்கப்படும் தள்ளுவண்டிகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் வழங்கப்படும்.

மொத்தத்தில், இத்திட்டத்திற்கென 500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

 6. சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் பெற்றுத் தருவதன் வாயிலாக பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும் மற்றும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் வழிவகை செய்யப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கென கடந்த 6 ஆண்டு களில் 32,848 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

1. வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான சத்துவாச்சாரி, அலமேல்மங்காபுரம் மற்றும் குணவட்டம் ஆகிய பகுதிகளில் 343 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் வேலூர் மாநகராட்சியிலுள்ள 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

2. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் 2 லட்சத்து 58 ஆயிரத்து 734 பேர் பயன்பெறுவர்.

3. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பொன்மலை மற்றும் அபிசேகபுரம் பகுதிகளில் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 454 பேர் பயன் பெறுவர்.

4. திருநெல்வேலி மாநகராட்சி இணைப்புப் பகுதிகளில் 326 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் பயன் பெறுவர்.

5. அடையாறு உப்பங்கழி மற்றும் கழிமுகப் பகுதியின் 358 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரையிலான 42 கிலோ மீட்டர் தூரத்தை 555 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.