டில்லி,

ஒரே மாதத்தில் ஜன் தன் கணக்குகளில் இருந்து சுமார் 5,500 கோடி ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுக்களான 500, 1000 ரூபாய்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய அரசு உத்தரவிட்டது.

மக்கள் வங்கிகள் வாசலில் காத்திருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்து வந்தனர். இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகினர்.

இந்தவேளையில், ஏழைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த  ஜீரோ பேலன்ஸ் எனப்படும் ஜன்தன் திட்டத்தில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மொத்தம் 25.68 கோடி ஜன் தன் சேமிப்பு கணக்குகள் உள்ளன.

இதில் கடந்த டிசம்பர் 7 ம் தேதி வரை 74,610 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, பணமில்லா ஏழைகள் கணக்கில் இவ்வளவு பணம் சேர்ந்தது குறித்து ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அடைந்தது. மேலும்,  ரிசர்வ் வங்கியும்  ஜன்தன் வங்கி கணக்கில் இருந்து  மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என  அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ஜன்தன் வங்கியில் டெபாசிட் செய்திருந்தவர்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக 74,610 கோடியாக இருந்த பணம்,கடந்த ஜன,11ந்தேதி நிலவரப்படி ரூ.69,027 கோடியாக குறைந்தது.

அதாவது ஓரே மாதத்தில் சுமார் 5,500 கோடி ரூபாய் பணத்தை ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்ப வர்கள்  திரும்ப எடுத்துள்ளனர்.

இதனால் வங்கிகளுக்கு வட்டி சுமை குறைவதாக கருதப்படுகிறது. மேலும் தற்போது  நாட்டில் பணப்புழக்கம் ஓரளவு குறைந்துள்ளதால்  வங்கிகளுக்கும் சுமை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பணம்  செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபின்னர்  சுமார் 1.5 கோடி புதிய ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.