பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

Must read

இடுக்கி,

கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர், காந்தலூர் பகுதிகள் வழியாக பாம்பாறு செல்கிறது.

இங்கிருந்து வரும்  தண்ணீர், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை  அருகில் உள்ள அமராவதி அணைக்கு செல்கிறது.

அமராவதி அணையில் இருந்து  திறக்கப்படும் தண்ணீர் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் பாம்பாற்றில் காந்தலூர் அருகே பட்டிச்சேறு பகுதியில் தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது.

இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக பட்டிச்சேறு பகுதியில் தடுப்பணை கட்டும் பணி முடங்கியது.

இந்த நிலையில் சின்னார் லோயர், அப்பர் பகுதிகளில் புதிதாக 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்க இருந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்ட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் கேரள அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தடுப்பணைகள் கட்டுவதற்கு தேவைப்படும் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு, அரசு சார்பில் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து , நில பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் தடுப்பணைகள் கட்டுவதற்கு கேரள அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 14 ஆண்டுக்கு முன்பு கேரள பகுதியிலுள்ள பவானி ஆற்றில் முக்காலி எனுமிடத்தில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டது. அப்போது தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால், அது தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொள் ளப்பட்டது. தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சியினர்  நடத்திய போராட்டம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பில்லூர் அணைக்கு முன்பாக 30 கிமீ தூரத்தில் கேரளாவின் தேக்கோட்டை எனும் கிராமத்தின் வழியாக செல்லும் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது.

தமிழகத்தை வஞ்சிக்க அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எப்போதும்  தயாராக இருப்பார்கள் போலும்….

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article