டில்லி:

கடன் பெறுவதற்காக மோசடி வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.5,200 கோடிக்கு போலி ரசீது தயார் செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போலி ரசீது மூலம் அதிகளவில் வர்த்தகம் நடந்ததாக பதிவேடுகளை தயாரித்துள்ளனர்.

நிரவ் மோடி _ மெகுல் சோக்சி

வருமான வரித்துறையின் இந்த குற்றச்சாட்டை நிரவ்மோடி, மெகுல் சோக்சியில் வக்கீல்கள் மறுத்துள்ளனர். இதில் உண்மை இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு வருமான வரித் துறையினர் மும்பை பந்திரா குர்லா வணிக வளாகத்தில் உள்ள பாரத் டைமண்ட் போர்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தினர். பிஎன்பி முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. இந்த நிறுவனம் போலி ரசீதுகளை வழங்கியிருப்பது தெரியவந்தள்ளது. இந்த நிறுவனம் 2,500 வைர வியாபாரிகளின் புகழிடமாக விளங்கியுள்ளது.

நிரவ் மோடி, மெகுல் சோக்சி நிறுவனங்களுக்கு 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் ரூ.5,200 கோடிக்கு மதிப்பிலான போலி ரசீதுகளை பாரத் டைமண்ட் போர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இது போல் போலி ரசீது வழங்கும் நிறுவனங்கள் 10 முதல் 12 வரை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. விற்பனை மற்றும் கொள்முதலுக்கான போலி ரசீதுகளை இந்நிறுவனம் வழங்கும். விற்பனையை பதிவேடுகளில் அதிகரித்து காட்ட இந்த போலி ரசீதுகள் உதவும்.

இதன் மூலம் வங்கிகளில் அதிகளவில் கடன் வாங்க உதவியாக இருக்கும். இந்த நிறுவனங்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதி ரசீதுகளையும் வழங்கி வந்துள்ளது. ஹாங்காங், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவர்களுக்கு தொடர்புள்ள நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளன. இதற்கு 1 முதல் 2 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக் கொண்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற நிறுவனங்களுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அரசியல் தலையீடு காரணமாக அந்த நடவடிக்கை அப்போது கைவிடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.