சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து  தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்  கூறி உள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறத. இதனால் மீண்டும் கொரோனா  கட்டுப்பாடுகள் சில பகுதிகளில் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அதிகரிப்பைக் கண்டு மக்கள் யாரும் பயப்படவோ,  பதட்டமடையவோத  தேவையில்லை என்று மத்திய அரசே கூறியுள்ளது.

இருந்தாலும், கொரோனா தொற்றைத் தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்றைக் குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி தொய்வையும் சரிசெய்யும் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் தொற்று உறுதியானவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றார்.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அனைவரும்  கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.