சென்னை: செம்மரம் கடத்தல் தொடர்பாக வழக்கு காரணமாக,  சசிகலா உறவினரான பாஸ்கரன் என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன  பாஸ்கரனை கடந்த 2021ம் ஆண்டு ஆந்திர மாநில போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், அவர் தற்போது  வருவாய் புலனாய்வு துறையினரால் மீண்டும்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரான பாஸ்கரன் என்பவருக்கு சென்னை அண்ணாநகரில் பிரமாண்டமான பர்னிச்சர் ஷோரூம் உள்ளது. இங்கு விலை உயர்ந்த மரங்களைக்கொண்டு பர்னிச்சர் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையில், ஆந்திராவில் இருந்து வெட்டி கடத்தப்பட்டு வரும் செம்மரங்களைக்கொண்டு பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்மீது ஆந்திரா போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில்,  மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும் அங்கு சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து,   அண்ணாநகரில் உள்ள பர்னிச்சர் கடையில் 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக  வருவாய் புலனாய்வு துறையினர் நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, அவரது சினிமா கம்பெனி உள்ள தி.நகர் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை விடிய விடிய நடைபெற்ற  நிலையில், இன்று அதிகாலை அவரை  மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  கைது செயதனர். இதையடுத்து, அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செம்மரம் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிர்வாகி விவேக் மாமனார் பாஸ்கரன் கைது