சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு  குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி, பிரமாண்டமான அணிவகுப்புகள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள், அரசு மற்றும் ராணுவம் உள்பட பல்வேறு துறையினரின் வாகனங்கள் அணிவகுப்பு என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறை, தீயணைப்பு துறை அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

வழக்கமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகள், பட்டினப்பாக்கம் லைட்அவுடஸ் அருகே உள்ள டிஜிபி அலுவலகம் எதிரே காந்தி சிலை முன்பாக நடைபெறும். தற்போது, அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு நடத்த முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, நடப்பாண்டி குடியரசு தின விழா நிகழ்ச்சியை சென்னை காமராஜர் சாலையில் எழிலகம் எதிரே அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே நடத்த தமிழகஅரேசு திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

இதைத்தொடர்ந்து குடியரசு தின  ஒத்திகை, கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.