மிழகத்தில் பிரியாணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆண்டு ரூ.4500 கோடி அளவில் வியாபாரம் நடைபெறுவதாகவும்  ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒரு காலத்தில் பிரியாணி என்பது, ஏதாவது விசேஷ தினங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு உண்டு மகிழ்ந்தனர். ஆனால், தற்போது சென்னை போன்ற நகர மக்களின் அன்றாட வாழ்க்கை யில் பிரியாணி ஒரு அங்கமாக மாறி விட்டது. இதற்கு உதாரணமாக ஒரே தெருவில் பல வகையான பிரியாணி கடைகள் முளைத்திருப்பதை பார்க்கலாம்…

இந்த நிலையில்,  சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் ஆண்டுக்கு ரூ.4500 கோடி கல்லா கட்டுவதாக பிரியாணி வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிரியாணிக்கென பல்வேறு தரமான மற்றும் ஸ்பெஷரான கடைகள் உள்ளன. குறிப்பாக திண்டுக்கல் தலப்பாகட்டி, புகாரி பிரியாணி, அஞ்சப்பர்,  ஜூனியர் குப்பண்ணா, ஆசிப் பிரியாணி உள்பட ஆம்பூர் பிரியாணி, வாணிம்பாடி பிரியாணி, முகல் பிரியாணி என  பல பிரியாணி கடைகள் பிரபலமானவை. இதுபோல ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பிரியாணி கடைகளும் உள்ளன.

இதுகுறித்து கண்காணித்து வரும் ஆய்வாளர்களின் கருத்துப்படி, குறிப்பிட்ட சில நிறுவனங்கள்  ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் மேல் வர்த்தகம் செய்வதாகவும்,  இவை மட்டுமின்றி அமைப்பு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், அந்தபகுதிகளில் மட்டும் உள்ள உள்ளூர் கடைகள் மூலம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில்  பிரியாணி விற்பனை செய்து வருவதாக வும் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக  தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு பிரியாணி மூலம் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெரு நிறுவனங்களை பொறுத்தவரையில் ஒவ்வொன்றும் மாதத்துக்கு 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் பிரியாணி மூலம் வர்த்தகம் செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் என்ற அளவில் ஒரு நிறுவனம் பிரியாணியை வர்த்தகம் செய்ய முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் பிரியாணி 180 ரூபாய் முதல் 600 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் அமைப்பு சாரா உள்ளூர் கடைகளில் விற்கப்படும் பிரியாணி 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 10 முதல் 15 கிலோ என்ற அளவில் பிரியாணி (ஒரு கிலோ பிரியாணியை 8 முதல் 10 பேர் சாப்பிடலாம்) தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றன.

சிறிய கடைகளில் அரை பிளேட் பிரியாணி 70 முதல் 90 ரூபாய்க்கும், கால் பிளேட் பிரியாணி 40 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரியாணி தொழில் வளர்ந்து வருவது குறித்து தலப்பாகட்டி நிர்வாக இயக்குநர் சதீஷ் நாகசாமி கூறும்போது, தமிழகத்தில் பிரியாணி தொழில் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் தேவையும் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ பிரியாணியை நாங்கள் தயாரிக்கிறோம்.. தங்களுக்கு  தினசரி 40 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வந்து பிரியாணி சாப்பிட்டு செல்கின்றனர் என்று பெருமிதமாக தெரிவித்தார். மேலும், நாங்கள் மேலும் 100 கடைகள் திறந்தாலும், அதற்கும் வர்த்தகம் நடைபெறும்  என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

பிரபலமான ஆசிப் பிரியாணி நிர்வாக இயக்குநர் திலிப் குமார், தங்களது பிரியாணியை தினசரி சுமார் 30 ஆயிரம் பேர் சாப்பிட்டு செல்கின்றனர். திருப்தியான சாப்பாடு என்பதால் மக்கள் பிரியாணியை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இன்று பிரியாணி என்பது  தமிழர்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட ஒரு அசைவ  உணவாக மாறி விட்டது.  நண்பர்கள் குழு ஒன்றிணைந்தால், அவர்கள் முதலில் விரும்புவது பிரியாணி… அதுபோல ஏதாவது விசேஷம் என்றாலும் பிரியாணி உண்டாப்பா… என்ற கேள்விதான் முதலில் எழுகிறது…. அந்த  அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் பிரியாணி சென்று விட்டது என்பதுதான் உண்மை.

Credit: The Hindu