துப்பாக்கிகளை துரத்தும் தூரிகைகள்: காபூல் நகரை மீட்டெடுக்க ஓவியர்களின் ஓயாத போராட்டம்

Must read

காபூல்:

ஆயுதத்தால் அழிந்துபோன ஒரு நாட்டை தூரிகையால் தூக்கி நிறுத்த அணிவகுத்திருக்கிறார்கள் ஓவியர்கள்.


ஆம்…1990-ம் ஆண்டுவரை அது சொர்க்க பூமிதான். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் வரை அந்நாட்டு மக்கள் சுதந்திரத்தை சுவாசித்து கொண்டிருந்தார்கள்.

அதன்பின்னர், பொழிந்த குண்டு மழையால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள் ஆப்கானிஸ்தானியர்கள்.

போரால் ஒரு தலைமுறையையே நரகத்துக்குள் தள்ளிய இந்த நாட்டில், ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை களைய ‘தூரிகை’ யை கையில் எடுத்திருக்கிறார் ஓவியர்கள்.

உடலில் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தும், இதயத்தில் வேதனையின் வடுக்கள் நிறைந்தும் வாழ்ந்தும் வாழாமல் இருக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு, நெஞ்சோடு அணைத்து அரவணைக்கும் தாயாகிப் போயிருக்கின்றன இந்த சுவரோவியங்கள்.

காபூலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நடந்து சென்றால், வழிநெடுக உள்ள பெரும் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஒரு நொடி ‘நம் இதயத்தை கைவிட்டு யாரோ உருவி எடுத்ததைப் போல’ ஒர் உணர்வை ஏற்படுத்தும்.

போரின் கொடூரத்தை உணர்த்தும் அந்த ஓவியங்கள், தாங்கள் சொல்ல முடியாததை உரக்கச் சொல்வதாகவே ஆப்கானிஸ்தானியர்கள் நினைக்கிறார்கள். இந்த ஓவியங்கள் ஆப்கானிஸ்தானியர்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
தங்களை கலையின் கடவுளாக வர்ணித்துக் கொள்ளும் 45 வயதையொட்டிய ஓவியர்கள், சுவர்களில் ஓவியம் வடிப்பதை சமூக மாற்றத்திற்கான திறவுகோலாக கருதுகின்றனர்.
ஒவ்வொரு ஓவியமும், ஆப்கானிஸ்தானியர்கள் உள்ளுக்குள்ளேயே போட்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு கதையைச் சொல்கிறது…

” நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, நகரத்தின் எந்த இடத்திலும் நடந்தோ, சைக்கிளிலோ செல்ல முடிந்தது” என்பதை எங்கள் சுவர் ஓவியம் வெளிப்படுத்துகிறது என்கிறார் ஓமைத் ஷரீப்.

கபீர் மொகமெல் என்பவருடன் சேர்ந்து சுவரோவிய இயக்கத்தை தொடங்கியிருப்பவர்தான் இந்த ஓமைத் ஷரீப்.

“தற்போது காபூல் நகரம் சிறையாக மாறிவிட்டது. இந்த சுவர்கள் தான் எங்களது விரக்தியை வெளிப்படுத்தும் வடிகாலாக மாறியுள்ளன. இந்த சுவர்களில் ஓவியத்தை வரைவதின் மூலம், எங்கள் பழைய காபூலை நினைவில் மீட்டெடுக்கின்றோம்.
காபூலில் மட்டும் இந்த ஓவியங்களை வரையவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் வரைந்துள்ளோம். போர்ச் சுவடுகள் மாறாத எங்கள் பூமியில், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாக இந்த சுவரோவியத்தை கருதுகின்றோம் என்கிறார் ஷரீப்.

கடந்த 2018- ல் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது, புலித் தோல் போர்த்திய கழுதையின் படங்களை சுவர்களில் வரைந்திருந்தனர்.

குற்றப் பின்னணியிலிருந்து வரும் வேட்பாளர்களை தேர்வு செய்தால், அவர்களது சுயரூபம் மாறப்போவதில்லை என்பதை பிரதிபலிப்பதாக இந்த ஓவியம் அமைந்திருந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷரீப்பின் தோழியான இளம்பெண் ஹமீத் பர்காமியின் படத்தை சுவரோவியமாக வரைந்தனர்.
மளிகைப் பொருட்களை வாங்கச் சென்றபோது, தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு குடும்பத்தோடு பலியானார் ஹமீத் பர்காமி.

ஹிஜ்ப்-இ-இஸ்லாமி என்ற தீவீரவாத அமைப்பின் தலைவன் குல்புதீன் ஹேக்மாத்யர் இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டான்.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் ஓவியத்தை,குல்புதீன் ஹேக்மாத்யர் வீட்டின் முன்பே இந்த கலைக் கடவுள்கள் வரைந்தனர். சில நாட்களிலேயே இந்த ஓவியம் அகற்றப்பட்டது.
இப்படி நாங்கள் வரையும் ஓவியங்கள், எங்களை ஒரு நாள் கொல்லக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம் என்கிறார் ஷரிப்.

எனினும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் பெரும்பாலான ஓவியர்கள் ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு காபூல் நகரம் எவ்வளவு அழகானதாக இருந்தது என்பதை இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ள எங்கள் ஓவியங்கள் வழிவகுக்கின்றன என்கிறார் ஷரீப்.

1990-க்கு முன்பு சோவியத் ராணுவம் வெளியேறியதும், காபூல் நகரைக் கைப்பற்ற பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் போட்டியிட்டன. அவர்கள் பரஸ்பரம் குண்டுகளை வீசிக் கொண்டனர். இதில் காபூல் நகரமே சிதைந்து போய்விட்டது.

2018-ம் ஆண்டு மட்டும் காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 519 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காபூல் சுவர்களில் இதுவரை 200 ஓவியங்களை இந்த கலைக் கடவுள்கள் வடித்துள்ளார்கள்.

முன்பெல்லாம் இந்த ஓவியத்தை வரைய இவர்களுக்கு 3 வாரங்கள் ஆகும். ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, 5 மணி நேரத்திலேயே வரைந்து விடுகிறார்கள்.

இந்த ஓவியங்களை வரைவதற்கு அரசும் ஆதரவாக இருக்கிறது என்பதுதான் இந்த கலைக் கடவுளர்களுக்கு கிடைத்த ஒரே நிம்மதி.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதமாக சுவரோவியத்தை மாற்றியிருக்கிறார்கள் கலைக் கடவுள்கள் என்று போற்றப்படும் இந்த ஓவியர்கள்.

2018-ல் நடந்த தாக்குதலில் ஆப்கான் சீக்கியர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். எங்கள் ஓவியர்கள் குழுவில் இருந்த ரவாய்ல் சிங்கும் இதில் கொல்லப்பட்டார். இவர் நினைவாகவும் ஓவியம் வரையப்பட்டது.
ரவாய்ஸ் சிங்கின் மகளின் ஓவியத்தை வரைந்து, “என் அன்புக்குரிய அப்பாவை கொன்ற நீங்கள், சொர்க்கத்துக்கு போக மாட்டீர்கள்” என்று சொல்வதைப் போன்று  எழுதியிருந்தார்கள். இந்த எழுத்துகள் காண்போரின் கண்களை குளமாக்கின.

“பாகிஸ்தானிடம் சொல்லுங்கள்..அவர்களால் எங்கள் நாடு எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று” என உருதுவில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துகின்றன.

“போர் தாக்குல்களால் துவண்டுபோன எங்களுக்கு ஓய்வு கொடுங்கள்…எங்கள் வலியை உலகுக்குச் சொல்லுங்கள்” என்ற வார்த்தையோடு அமைந்துள்ள ஓவியம் காண்போர் மனதை ஏதோ செய்யாமல் இல்லை.

கலைக் கடவுள்கள் என்று போன்றப்படும் இந்த ஓவியர்களின் கையில் இருக்கும் தூரிகைகளால், காபூல் மீண்டும் சொர்க்கமாகும்” என்று உறுதியாக நம்புவோம்.

 

More articles

Latest article