சென்னை: தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.350 கோடி வாக்கி டாக்கி  டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் ரூ.350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக தமிக உள்துறைச் செயலாளரே குற்றம் சாட்டி இருந்தார். இந்த முறைகேட்டில்,  தமிழகக் காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவின் எஸ்.பி.யாக இருக்கும் அன்புச் செழியன், ரமேஷ் மற்றும் கூடுதல் எஸ்பி , டிஎஸ்பி உள்ளிட்ட பலர் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதையடுத்து விசாரணைக்கு தமிழகஅரசு உத்தரவிட்டது.

முதல்கட்ட விசாரணையில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து,  முறைகேடு தொடர்பாக  காவல்துறை அதிகாரிகளின்  வீடுகள் உள்பட  100 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி வீடுகள் மற்றும் வாக்கி டாக்கி சப்ளை செய்த நிறுவனங்கள் உள்பட சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்றது.

பின்னர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, விசாரணை நடவடிக்கைகள் தொய்வடைந்தன. தற்போது மீண்டும் விசாரணையை  லஞ்சஒழிப்புத்துறை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.