கொழும்பு: இலங்கை அகதிகளுக்காக  சட்டப்பேரவையில் ரூ.317 கோடியில் நலத்திட்டங்கள் அறிவித்துள்ள  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை எம்.பி. சுமந்திரன் நன்றி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  நேற்று வணிகவரி, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,  இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். . விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் உள்பட ரூ.317 கோடியில் நலத்திட்டங்கள் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு இலங்கை அகதிகள் உள்பட பல தரப்பினர் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை எம்.பி. எம்.ஏ சுமந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.