மும்பை

பிரபல பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்குப் போலி ஜிஎஸ்டி பில் விவகாரம் காரணமாக ரூ.30 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜிஎஸ்டி அமைப்பு போலி ஜிஎஸ்டி பில்கள் மூலம் மோசடிகள் நடப்பதைக் கண்டறியப் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  மும்பை பகுதியில் பல பிரபல நிறுவனங்களில் சோதனை நடத்தி 3200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் 46 பேர் நிர்வாகத் தலைவர்கள் ஆவார்கள்.,  மேலும் 5 தலைமை அதிகாரிகள், மற்றும் 10 தணிக்கையாளர்களும் கைதானவர்களில் அடங்குவர்.   இந்த சோதனைகள் மூலம் சுமார் 9600க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.,

இந்தியாவில் மிகவும் பிரபலமான பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாக எல் அண்ட் டி நிறுவனம் விளங்கி வருகிறது..   இந்த நிறுவனத்தின் மும்பை கிளையில் கடந்த ஜனவரி மாதம் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி துறை ஆகியவை ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி தொடர்பான சோதனைகள் நடத்தியது.  அப்போது பல போலி ஜிஎஸ்டி பில்கள் கிடைத்துள்ளன.

இதையொட்டி ஜிஎஸ்டி அமைப்பு எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.30 கோடி அபராதம் விதித்துள்ளது.   இந்த சோதனையின் போது அரசியல் கட்சிகளுக்கு இந்த நிறுவனம் கணக்கில் காட்டாமல் நன்கொடை அளித்துள்ளது தெரிய வந்துள்ளதாக ஒரு அதிகாரி கூறி உள்ளார்.

ஆனால் அவர் மேற்கொண்டு விவரங்கள் அளிக்க மறுத்துள்ளார்.  இது குறித்து எல் அண்ட் டி நிறுவனமும்  எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.