சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3-க்கு மேல் பணம் பெற்று விட்டு, அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், வாங்கிய பணத்தை கொடுக்க மறுத்ததாலும், பணம் கொடுத்தவர்கள் அவர்மீது விருதுநகர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில்  ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், ராஜேந்திர பாலாஜி சார்பில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.