சென்னை: தமிழ்நாட்டில்  2021-ஆம் ஆண்டு ஜனவரியில்  கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது முதல் தேர்தல் பிரசாரத்தின்போது சேலத்தில்அறிவித்தார். இந்த நிலையில், அது தொடர்பான தமிழ்நாடு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் நான்கைந்து மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில், தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக, முதல்வர் பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியான,  எடப்பாடி தொகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 19) அம்மா மினி கிளினிக் மருத்துவமனையைத் தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது,  தைப் பொங்கலையொட்டி, ஜனவரி மாதம்  தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும்  என்றும், ஜனவரி 4-ம் தேதியிலிருந்து வழங்கப்படும என அறிவித்தார். மேலும், இதற்காக  வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு, அதற்கேற்ப நியாயவில்லை கடைகளில் பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 2,500;வழங்குவதற்கான அரசாணை இன்று  (டிசம்பர் 21) வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ரூ. 5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.