25 லட்சம் கோடி 25,00,00,00,00,000 மக்களின் சேமிப்புக்களை, வரிப்பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்து இருக்கிறது மோடி அரசு

– ஆர் எம் பாபு

இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை.  நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பல மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீடு தொகை உரிய காலங்களில் வழங்கபடாமல் இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1500 கோடி கூட கொடுக்க இயலாமல் ஜப்பான் நாட்டில் கடன் வாங்கி கட்ட சொல்கிறது.

மாணவர்களின் கல்விக்கடனுக்கும் விவசாயிகளின் கடன்களையும் அல்லது குறைந்த பட்சம் அந்த வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தால் நிராகரிக்கிறது ஒன்றிய அரசு..

CAG அறிக்கையில் 7.5 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்கிறது அன்று கூறியபின்னர் அந்த முறைகேட்டை பற்றி எதுவும் பேசாமல் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அதிகாரிகளை பந்தாடி வருகிறது.

பல இடங்களில் இந்த CAG தணிக்கை துறை அதிகாரிகளை ஆய்வு செய்யும் இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று வாய்வழியாக உத்தரவு பிறப்பித்து முறைகேடுகளை வெளிக்கொணராமல் முடக்க பார்க்கிறது.

ஒரு பக்கம் கடுமையான வரி, இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தின் காரணமாக விலைவாசி ஏறி நிற்கிறது.  மறுபக்கம் மோடியின் செல்லப்பிள்ளை அதானியின் நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மூலம் கொள்ளை லாபம் வைத்து அரசுக்கு விற்பனை செய்கிறது.  இப்படி விலை அதிகமான நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை ஏறி, பல்வேறு தொழில்கள் நசுங்கும் நிலையில் இருக்கிறது.

இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதால் ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 07-08-2023 அன்று நாட்டில் நிலவும் வாராக்கடன் பற்றிய கனிமொழி கருணாநிதி, பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எண் 2983 க்கு  பதிலளித்து பேசிய  டாக்டர் பகவத் கராத், ஒன்றிய துணை நிதி அமைச்சர் அளித்த பதிலுக்கும் இப்போது தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலுக்குமே வித்தியாசம் இருக்கிறது.

இதில் வெட்ககேடான விஷயம் என்னவென்றால் எவ்வளவு தொகை பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விபரத்தை மத்திய ரிசர்வ் வங்கி தனியாக பேணிக்கவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப நம் பாராளுமன்ற உறுபினர்கள் முன் வரவேண்டும்.

இப்படியான ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்த நிதித்துறை அமைச்சகம், இப்போது கேரளா மாநிலம் ஆழப்புழையில் பிறந்த சஞ்சய் ஈழவா, தற்போது குஜராத் மாநிலத்தில் சமூக போராளியாக இருப்பவர் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் எவ்வளவு வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் கொடுத்து இருக்கிறது.

இந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில், நம் நாடு எவ்வளவு வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தள்ளாடும் நிலை இருக்கிறது.

வசூல் ராஜா MBBS எனும் திரைபடத்தில் கமலஹாசன் பதில் தெரியாதவர்களிடம் கேள்வி கேட்டால் பரவாயில்லை. கேள்வியே புரியாதவரிடம் கேள்வி கேட்கிறீர்களே என்பதை போல தெளிவாக கேள்விகளை வைத்த பின்னரும் அதற்கு பதிலாக உங்கள் கேள்வி புரியவில்லை என்ற அடிப்படையில் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்கள்.  இப்படி தகுதியற்றவர்களை வைத்து தான் நம் மத்திய ரிசர்வ் வங்கி இயங்குகிறது என்பதை பதில் எண் 7 மற்றும் 8 லே புரிந்து கொள்ளலாம்.

இந்த பதில்களை விட இன்னும் வியப்பூட்டும் விதத்தில் இதற்கு முன்னரான அரசாங்கம் எவ்வளவு தள்ளுபடி செய்திருக்கிறது என்ற கேள்விக்கு இந்த தரவுகளே இல்லை என்று பதிலளித்து இருக்கிறார்கள்.  இப்படியான நிலையில் TRANSPARANT வெளிப்படைத்தன்மையான அரசாங்கத்தில் நாம் இருக்கிறோம்.

இப்படியாக இதுவரையில் எந்த ஒரு கேள்விக்கும் முறையான விளக்கமோ பதிலோ இல்லாத இந்த அரசாங்கம்.

PMCARES பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை.

ELECTORAL BOND பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை

இப்போது மொத்தமாக சில கேள்விகளை பாராளுமன்றத்திலும் தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாகவும் கேட்டு பெறப்பட்ட தகவல்கள் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் இருப்பதோடு பொதுமக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டு இருப்பது கண்கூடாக தெரிகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் தனியார் முதலாளிகளுக்கு மோடி அரசு கடன் கொடுத்து, வாராக்கடன் எனும் கணக்கில் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே ரூ. 25 லட்சம் கோடிகள்.

(ரூபாய் கோடிகளில்)

வருடம்   பொதுத்துறை வங்கிகள்    வணிக வங்கிகள்    மொத்தம்  
2014-15 49,010 58,786 1,07,796
2015-16 57,585 70,413 1,27,998
2016-17 81,683 1,06,373 1,88,056
2017-18 1,28,229 1,61,323 2,89,552
2018-19 1,83,202 2,36,265 4,19,467
2019-20 1,75,877 2,34,170 4,10,047
2020-21 1,31,894 2,02,781 3,34,675
2021-22 1,15,536 1,74,966 2,90,502
2022-23 1,18,950 2,08,037 3,26,987
10,41,966 14,53,114 24,95,080

(இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.டி.ஐ.மூலம் S-5475/01.12.001/2022-23 Vol11 – 11-10-2023 தேதியிட்ட பதிலில் குறிப்பிடப்பட்ட விபரங்கள்)

இப்படி சராசரியாக ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடிகள் வராக்கடனாக மட்டும் தள்ளுபடி செய்து கொண்டு இருக்கிறது.  மேலே இருக்கும் விபரம் சென்ற நிதியாண்டு வரைக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை.  இந்த நிதியாண்டில் என்ன எல்லாம் செய்ய இருக்கிறார்களோ தெரியாது.

பொதுவாக வங்கிகள் தொழில் செய்வதற்கு கடன் கொடுக்கிறது.  இப்படி வழங்கப்படும் கடன்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.  ஒன்று பிணையுடன் கூடிய கடன் (SECURED LOAN) இன்னொன்று பிணையில்லா கடன் (UNSECURED LOAN).

சாதாரணமாக சிறுகுறு நிறுவனங்கள் கடன் கேட்டால் அதற்கு எந்த சொத்தை ஈடுகடனாக எழுதி வைப்பீர்கள் என்று கேட்டு அந்த சொத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து தான் தருவார்கள்.  நாளை ஏதேனும் காரணங்களால் அந்த கடனை கட்ட முடியாவிட்டால் அந்த சொத்தினை ஜப்தி செய்து ஏலம் விட்டு அதில் வரும் பணத்தின் மூலம் அந்த கடன் தொகையில் வரவு வைப்பார்கள்.  அப்படி இருக்கும்பட்சத்தில் பிணை இன்றி வழங்கப்பட்ட கடன் வசூலிக்க இயலாமல் இருந்து அது தள்ளுபடி வரை சென்று இருக்கிறது.

இப்படி பிணை இல்லா கடன் வாங்கியவர்களின் பட்டியலை கேட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு எதிரானது என்றும் அதை தரவேண்டியதில்லை என்றும் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பதில் தருகிறார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் நிதிநிலை பற்றி அறிய உரிமை இருக்கிறது.

நேற்றைய தினம் அண்ணாமலை மாநில அரசாங்கத்தின் கடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3.5 லட்சம் இருப்பதாக வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.  இந்தியாவின் கடன் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வாங்கிய 100 கோடி கடன் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 4 லட்சம் இருக்கிறதே.  அதை பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா?

இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் பெற்ற கடன் தொகை வெறும் 65 லட்சம் கோடி மட்டும் தான்.  25 லட்சம் கோடி பெரு முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம் மாநிலங்களின் கடன்களை தள்ளுபடி செய்து இருக்கலாமே..  இந்த மாநிலங்களின் கடன்களில் பெரும்பான்மை நலத்திட்ட உதவிக்காக செய்தவை தானே.

இப்படியாக அனைத்திலும் ஊழல், முறைகேடு, தனியார் துறைக்கும் தனது கூட்டாளிகளுக்கும் ஆதரவான நிலையில் இந்த ஆட்சி நடந்து வருகிறது.  அந்த கூட்டாளிகள் தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கும் தேர்தல் செலவினத்திற்கும், ஊடக விளம்பரத்திற்கும், விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களை கொடுத்து உதவி வருகிறது.  அவர்களுக்கு பிரதி உபகாரமாக இந்த மோடி அரசு உதவிகளை கைமாறாக செய்து வருகிறது.