சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மணல் ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகள் மற்றும் குவாரி காண்டிராக்டர்களான , எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் ED 12/09/2023 அன்று சோதனை நடத்தியது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை உள்பட, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் , நாமக்கல் என ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  மூன்று நாட்களாகத் தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாகச் சோதனை நடைபெற்றது. மணல் குவாரிகள் மற்றும் மணல் காண்டிராக்டர்கள் என எட்டு குவாரிகள் தொடர்புடைய இடங்கள் மற்றும் குவாரியை நடத்தி வந்த அதிபர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள், உறவினர்கள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், ஆவணங்கள் குறித்த தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி,  கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 56.86 லட்சம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அமலாக்கத்துறை தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் மற்றும் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி. சண்முகராஜ் உள்ளிட்டோரின் வீடு மற்றும் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என 34 இடங்களில் சோதனை நடத்தினோம். மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சோதனையில், பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ.2.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.12.82 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.56.86 லட்சம் மதிப்பிலான 1024.6 கிராம் எடை தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக கூறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர், “தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் டன் மணல் அள்ளப்படும் நிலையில், பதிவேடுகளில் முப்பதாயிரம் டன்களைத்கூட தாண்டுவதில்லை என்கிற புகார்களைப் பெற்றோம். அதோடு, மணல் அள்ளப்படுவதற்காக வழங்கப்படும் ரசீதுகள் போலி என்பதும் தெரியவந்தது. எனவே, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி எண்ணும் போலியாக இருக்கும்பட்சத்தில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய 5% ஜி.எஸ்.டி வரியில் ஏய்ப்பு நடந்திருக்கிறது என்பதும் இங்கு தெளிவாகிறது. ஓர் அரசு நிறுவனம் ஆயிரக்கணக்கான போலி ரசீதுகளை அச்சிட அனுமதித்தது எப்படி என்கிற கோணத்தில்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனைகளில் ஈடுபட்டோம். இதில் பெரும் மோசடி நடந்திருக்கிறது என்பதை அங்கு சோதனை செய்தபோது சில ஆதரங்களின் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

அதோடு சம்பந்தப்பட்ட மணல் கான்ட்ராக்டர்களின் இல்லம், அலுவலகங்களில் சோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்கும், அவரைச் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கணிசமான பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவ்வாறு முறைகேடாக எடுக்கப்படும் மணல் தனியார் பில்டர்கள் தவிர, பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மணல் விலை அதிகமாக இருப்பதால், மத்திய அரசு கொண்டுவந்த பெரும்பாலான NHAI திட்டங்கள் முடங்கியிருக்கின்றன. இது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தொடர்ந்து நடக்கும் மணல் மோசடியால் இப்போது அந்தத் துறையும் சிக்கலில் இருக்கிறது. கனிம வளத்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சோதனையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில்,  சோதனைகள் விரிவடையலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மணல் மோசடியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து கூறும் அதிகாரிகள்,  “தமிழ்நாட்டில் நீர்வளத்துறை (WRD) மூலம் மணலும், PWD மூலம் எம்-சாண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் முறை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு ஆன்லைனில் மணல் பெறுவதற்காகப் பதிவு செய்யும்போது அந்த இணைய பக்கம் எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. இதன் மூலம் அரசிடமிருந்து மணல் வாங்குவதற்கு பதிலாக, தனியாரிடம் வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது குறித்துப் புகார் தெரிவித்தாலும், ‘தொழில்நுட்பக் கோளாறு’ என்று சாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள் அதிகாரிகள்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யும்போது ஜி.எஸ்.டி எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது அந்த ஜி.எஸ்.டி எண்ணுக்கு பதிலாக, போலியாக அச்சிடப்பட்டிருக்கும் ரசீதுகளில் வேறொரு ஜி.எஸ்.டி எண் குறிப்பிடப்பட்டு, பல கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பும் மோசடியும் நடந்திருக்கின்றன. இதை அறிந்துதான் இப்போது அமலாக்கத்துறையினர் பண மோசடி குறித்த சோதனையில் இறங்கியிருக்கின்றனர். அதனடிப்படையில்தான் தமிழகத்தில் மணல் தொழிலில் கோலோச்சுபவர்களைக் குறிவைத்திருக்கின்றனர். இதனால் அந்தத் துறையின் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கடி ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

மணல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களோ, “இந்த விவகாரத்தில் அரசுதான் சிக்கலில் மாட்டியிருக்கிறது. மணலைப் பொறுத்தவரை அரசு பெயரில்தான் லைசென்ஸ் இருக்கிறது. மணல் அள்ளிக் கொடுப்பது மட்டும்தான் ஒப்பந்ததாரர்களின் வேலை. விற்பது அரசாங்கம். ஆனால் அரசு விற்காமல், மணல் தொழில் ஈடுபட்டிருக்கும் சிலரே போலியாக ரசீது அடித்து விற்பனை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக எழுந்த போட்டியில்தான், அவர்களில் ஒருவரே இது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறைக்கு `நோட்’ போட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி தரப்பில் நாம் விசாரித்தபோது, “செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக, மற்ற துறைகளில் ஊழல், மோசடி என வெளிப்படையாகப் பார்க்கும்போது கனிம வளத்துறையில்தான் அதிக அளவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘நாங்கள்தான் மத்திய அரசுக்கு அதிகமாக ஜி.எஸ்.டி கொடுக்கிறோம்’ என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, மறு பக்கம் கனிம வளத்துறையில் பெரும் அளவுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களிலிருந்து கிடக்கும் மணல் சம்பந்தமான ஜி.எஸ்.டி தொகையை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குறைவாகவே கட்டப்படுகிறது. இன்று எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறியிருக்கின்றன என்பதை மறந்து, இவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவையெல்லாமே டிராக் செய்யப்படுகின்றன”.  இதைத்தொடர்ந்தே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.