சென்னை: பொதுவெளியில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து கடந்த மாதத்தில் ரூ.14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.4.2022 முதல் 30.4.2022 வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய 573 நபர்களுக்கு ரூ. 13.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலிருந்து கட்டிட கழிவுகளும், சாலைகளின் ஓரங்களில் கொட்டப்படுகின்றன.

இவ்வாறு குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதால் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங் களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீது ரூ.500 – மற்றும் கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீது ஒரு டன் வரை ரூ.2 ஆயிரம்- மற்றும் ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம்- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1.4.2022 முதல் 30.4.2022 வரை சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய 382 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 100 அபராதமும், அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 191 நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 17 – அபராதமும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 85 ஆயிரத்து 117 – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுஇடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறுகூறியுள்ளது.