சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.  இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 10 தொகுதிகளில் போட்டிடும் நிலையில், பல்வேறு அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

இந்த அறிக்கையில், அனைத்து சாதிக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் .  இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு வைக்கப்படும்,  என்பது உள்பட ஏரளமான  வாக்குறுதிகள்  அளிக்கப்பட்டுள்ளன.

  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
  •  கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்
  • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதை உறுதி செய்யப்படும்.
  • அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு வழங்கப்படும்
  • ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மாநில தன்னாட்சி அதிகாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
  • தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
  • 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.
  • என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.
  • மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.