சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்த  மோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. மோசடி பத்திரம் ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிமையாளர்களுக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது. இதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கிய நிலையில், 2022 ஆகஸ்டில் தமிழக அரசு சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.

அதாவது, போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.  அவ்வாறு செய்யப்பட்டுள்ள மோசடி பத்திரங்களை கண்டு பிடித்து  ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.  இதன்படி,  மோசடி பத்திரங்கள் தொடர்பாக, 11,100 புகார்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பத்திர பதிவுகள், ரத்து செய்யப்பட்டன.

அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, புதுக்கோட்டையை சேர்ந்த வளர்மதி உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைதொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்தகால விசாரணைகளின்போது, முதலில், இந்த சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்துவதை நீதிபதிகள் கடந்த 2023ம் ஆண்டு  தடை விதித்தனர். அதைத்தொடர்ந்து,  மோசடி பத்திர புகார்கள் மீதான விசாரணையை நிறுத்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2023 அக்டோபரில் அனைத்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பினார்.

அவரது சுற்றறிக்கையில்,  “இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மோசடி பத்திரங்கள் ரத்து தொடர்பான புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். இறுதி முடிவு வரும் வரை, இந்த மனுக்களை விசாரிக்க வேண்டாம்.. 2022 ஆகஸ்ட் 16க்கு முன் மற்றும் பின் பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் இது பொருந்தும்” என்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், மோசடி பத்திரங்கள் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 12ல் பிறப்பித்த உத்தரவில், மோசடி பத்திரங்கள் மீது மாவட்ட பதிவாளர்கள் விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று தெரிவித்தது. இதனால், இதில் மேலும் குளறுபடிகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை நேற்று ( மார்ச் 26ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி,  வழிகாட்டுதல் இல்லாத அதிகாரங்கள், புதிய சட்ட திருத்தத்தின் கீழ் மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கென வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வில்லை. புகார் யார் அளித்தாலும், பத்திர பதிவு ரத்து செய்யப்படும். எப்படி விசாரிக்க வேண்டும்; விசாரணைக்கு உரிய காலவரம்பு என, எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. வானளாவிய அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கினால், அசாதாரண சூழல் உருவாகும். இதனால்,  துஷ்பிரயோகம் அதிகமாக நடக்கும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக, 90 வயது மூதாட்டி ஒருவரின் பெயரில், 60 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்த விதிகளால், அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று  வாதாடினார்.

இதைத்தொடர்ந்து ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ”இந்த விவகாரம் தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்,” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், சோதனை முறையில் பரிசீலித்த போது, சட்ட திருத்தத்தின்படி ஏராளமான புகார் மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்டத் திருத்தம் குறித்து, ஏப்., 4ல் பதிலளிக்க தமிழக அரசை அறிவுறுத்தியதுடன், அதுவரை சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளிவைத்தனர்.