திருச்சி

றக்கும் படை சோதனையில் அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான காரில் சாக்கு மூட்டையில் இருந்த ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.  இதையொட்டி மாநிலத்தினுள் சரியான ஆவணங்கள் இன்றி ரொக்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.  இதைக் கண்டறியப் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கைப்பற்றி வருகின்றனர்.

அவ்வகையில் திருச்சி – கரூர் சாலையில் உள்ள பெட்டவாய்த்தலை பாலம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது சாலையில் ஒரு கார் நின்று கொண்டு இருப்பதையும் அருகில் ரூ.1 கோடி பணத்துடன் ஒரு சாக்கு மூட்டையையும் கண்டுபிடித்துள்ளனர்.  அந்த கார் அதிமுக முசிறி சட்டப்பேரவை உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான செல்வராஜுக்குச் சொந்தமானதாகும்.

இந்த காரில் தொட்டியம் அதிமுக கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் இருந்துள்ளனர்.  அவர்கள் விசாரணையில் அந்த பணம் தங்களுடையது இல்லை எனவும் தாங்கள் காரில் வரும் போது சிலர் வழியில் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும் தங்களைப் பார்த்ததும் இந்த மூட்டையை விட்டு விட்டு ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பாத பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து காரில் இருந்த 4 பேரையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர்.   திருச்சி மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளார்.   இதுவரை பல இடங்களில் பணம் கைப்பற்றிய நிகழ்வு நடந்துள்ள போதிலும் வேட்பாளர் கார் அருகே ரூ.1 கோடி பிடிபட்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.