சென்னை

சுமார் 24 நாட்களுக்குப் பிறகு இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி மாற்றி அமைக்கிறது.    ஆனால் கடந்த காலத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்த போதும் இந்தியாவில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் பெட்ரோல் டீசல் தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க உற்பத்தி நாடுகள் ஒப்பந்தம் இட்டன.  அதன் விளைவாகக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.   அதன் அடிப்படையில் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது.

ஆனால் 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படாமல் ஒரே நிலையில் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லேசாகக் குறைந்துள்ளது.  அதன்படி இன்று காலை முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.95 ஆகவும் டீசல் விலை ரூ.86.29 ஆகவும் உள்ளது.