டெல்லி:  போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு செய்துள்ளது.

டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,  தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,   வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

மனுவில், அமலாக்கத்துறை, திகார் சிறைக்கு சென்று  ஜாபர் சாதிப் உள்பட 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை  மத்திய தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 3,500 கிலோ போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.

இந்த வழக்கு  தொடர்பாக, ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் இயக்குநர் அமீரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தை என்ன செய்தார்கள்?..யாருக்கு கொடுத்தார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து,  ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஏப்ரல் 15ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குமூலம் வாங்க அனுமதி கோரி   டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.