திருப்பதி

தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை ரோஜா கூறி உள்ளார்.

நடிகையும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியுமான ரோஜா திருப்பதியில் வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.    நகரி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரான நடிகை ரோஜா  அதன் பின் செய்தியாளர்களிடம் உரையாடினார்.

அப்போது ரோஜா, “வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் தவறினால் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாம செய்வார்கள் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தற்போது மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவர்களுக்கும் இதற்காக எம் பி பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.    இதே போல ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் இதற்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவித்ததோடு சரி,  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.   ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்றால் கட்சி பேதமின்றி அனைவரும் போராட்டத்தில் இறங்க வேண்டும்”   என தெரிவித்தார்.