கான்பூர்

கான்பூர் நகரில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பசுபதிநகர் கிளையின் சுவற்றில் ஓட்டை இட்டு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார், “கான்பூர் நகரில் பசுபதி நகர் பகுதியில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கட்டிட சுவற்றில் கொள்ளையர்கள் ஓட்டை இட்டுள்ளனர்.   பிறகு அதன் வழியாக உள்ளே புகுந்து,  ஜன்னலை உடைத்துக் கொண்டு லாக்கர்கள் இருக்கும் அறையில் நுழைந்துள்ளனர்.    அதன் பின் அங்குள்ள கண்காணிப்பு காமிராவை செயலிழக்கச் செய்துள்ளனர்.   பதிவான வரையில் அவர்கள் முகமூடி அணிந்திருந்தது மட்டுமே தெரிய வந்துள்ளது.

லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.   இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.    லாக்கர்களை எரிவாயு கொண்டு வெட்டி எடுத்துள்ளனர்.   மொத்தமுள்ள 220 லாக்கர்களில் 32 லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

மேலும் வங்கியின் பணம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் உள்ளும் நுழைய முயன்றுள்ளனர்.    ஆனால் அது நடைபெறவில்லை.    இதனால் திருடர்கள்  பல மணி நேரம் வங்கியின் உள்ளே இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துளது.   இன்று விடியற்காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காலையில் வங்கி அதிகாரிகளும்,  ஊழியர்களும் வந்ததும் லாக்கர்கள் திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.   அவர்கள் அளித்த புகாரின் பேரில் நாங்கள் உடனடியாக வந்து விசாரணையை தொடங்கி உள்ளோம்.    மொத்தம் திருட்டுப் போன பொருட்களின் மதிப்பு என்ன என்பது இன்னும் சரியாக அறியப்படவில்லை. :  என தெரிவித்துள்ளார்.