சோளிங்கநல்லூர்: சென்னை அருகே சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மருத்துவர்மீது ‘ஸ்பிரே’ அடித்து, கத்திரிக்கோல் முனையில் கொள்ளை அடித்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொள்ளை  சம்பவத்தில்  ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது  செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்சோழிங்கநல்லூர் காந்தி நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் டாக்டர் சதீஷ்குமார் வயது (28) . இவரது மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரேன அவர்மீது( மிளகுத்தூள் ஸ்பிரேவை அடித்ததுடன், மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோல்முனையில், அவரிடம் இருந்த பணம் மற்றும் செயின், செல்போனை கொள்ளையடித்தனர். மேலும், அவரது கார் சாவியையும் பறித்தனர். அப்போது டாக்டர் கூச்சலிட்டார்.

இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்,  பொதுமக்கள் திரண்டதால் பதற்றமடைந்த மர்மநபர்கள் இருவரும் தப்பி ஓடினர். பழைய மகாபலிபுரம் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றபோது, அச்சமயம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மோதியதில் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார். மற்றொருவர் தப்பி ஓடினார்.

இதைத்தொடர்ந்து, காயமடைந்து கீழே கிடந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.   இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ விரைந்து வந்து பிடிபட்ட நபரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.  தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  தப்பி ஓடிய நபர் வெற்றிச்செல்வன் என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து  தனிப்படையினர் அங்கிருந்த வெற்றிச்செல்வன் (35), சத்தியசீலன் (36), பிரதாப் (36) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் வைத்திருந்த ஏர்கன்-ஐ பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட டாக்டர் சதீஷ்குமாரும் மற்றும் கைதான சிதம்பரத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்கள் என்பதும், இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்ட நிலையில், சதீஷ்குமாரிடம் அதிக பணம் இருப்பதையறிந்து நண்பர்களுடன் சேர்ந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதற்காக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், பிரகாஷின் தம்பி பிரதாப், வெற்றிச்செல்வன் ஆகிய 3 பேருடன் இணைந்து சத்தியசீலன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.