சென்னை: தமிழ்நாட்டில் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக சாலையோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சாலையோரம் பல்வேறு வகையான கடைகளை வைத்து  பல கோடி பேர் பிழைத்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் வகையில்,  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு,  பிஎம் ஸ்வநிதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.  கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தில் ரூ.10,000 சிறப்பு கடன் வழங்கப்படுகிறது,. இந்த கடனை மாதத் தவணையாக, ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக கடனை திருப்பி செலுத்தினால் ஏழு சதவீத வட்டி மானியம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் கடன் பெற சாலையோர வியாபாரிகள் pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை அளித்து தகவல்களை பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான கடன் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் கடந்த 2020-21 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்த  87,716 வியாபாரிகளுக்கு ரூ.87 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 2021-22 ம் ஆண்டில் 73,983 வியாபாரிகளுக்கு ரூ.78 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், , 2022-23ம் ஆண்டில் 8,322 வியாபாரிகளுக்கு ரூ.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.198 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசும்,  சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக தனி வாரியத்தை அமைத்தள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் ஒழுங்குமுறை) சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 33, 1982) இன் பிரிவு 6 இன் துணைப் பிரிவுகள் (3) மற்றும் (5) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு எண்.11(2)/LE/123(a-2)/2010 பிப்ரவரி 26, 2010 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் அரசிதழின் சிறப்பு பகுதி II-பிரிவு 2 இன் 2-3 பக்கங்களில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் கீழ்கண்ட உறுப்பினர்களை தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் நல வாரியத்திற்கு நியமனம் செய்கிறார். என்று குறிப்பிட்டுள்ளது.