சென்னை: சென்னை பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. மெட்ரோ ரயில்நிலையங்களைப்போல பறக்கும் ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான டெண்டர் கோரியுள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவையை தொடர்ந்து, பறக்கும் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. பின்னர், மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. தற்போது, மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், சென்னை மட்டுமின்றி, சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்க தலைநகரங்களிலும் கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில்,. 1997ஆம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக சென்னை கடற்கரை- மயிலாப்பூர் வரை  தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அதன் நீளம் அதிகரிக்கப்பட்டது. அதன்படி,  மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து ஆலந்தூர் வரை நீட்டிப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வழக்குகளால் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போதுள்ள  பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்றவும், குறிப்பாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும், மந்தவெளி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்ப்பட்டு இருப்பதாகவும், பறக்கும் ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள்,  உணவகங்கள், பார்க்கிங் வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்காக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்ததும் விரைவில் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பறக்கும் ரயில் நிலையங்கள் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல்  இருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில்நிலையம் போல பறக்கும் ரயில் நிலையத்தையும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் பறக்கும் ரயில் நிலையங்களும் மாற்றப்பட இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்