சாலை சீரமைப்பு : ஏற்காடு செல்லும் பயணிகள் அவதி
இந்த வருடம் ஏப்ரல் முதல் வாரம் முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும் ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரிக்கு அதிகமாகவும் வெயில் சுட்டெரித்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெயிலுக்கு இதமாகக் குளுமையான சுற்றுத்தலங்களுக்கு சென்று வர மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையொட்டி ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்குக் கடந்த வாரத்திலிருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில் ஏற்காட்டுக்கு செல்வதற்கான முக்கிய சாலையான, சேலம் அடிவாரம் – ஏற்காடு மலைப் பாதையில், பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே அச்சாலையில் 4 சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஏற்காடு சுற்றுலா வரும் வாகனங்கள், அயோத்தியாப் பட்டணத்தை அடுத்த குப்பனூர் – ஏற்காடு மலைப்பாதை வழியாக, ஏற்காடு வந்து செல்கின்றன.
கோடை விடுமுறை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குத் தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டுக்கு நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகமாக இருந்தது. மேலும் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏற்காட்டுக்குச் சுற்றலாப் பயணிகள் வருகை தந்ததால் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் குப்பனூர்- ஏற்காடு மலைப்பாதை வழியாகவே வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சுற்றுலாப் பயணிகள் இது குறித்து, “நாங்கள் ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் ஏற்காடு வந்து செல்கிறோம். தற்போது ஏற்காடு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கு வந்து செல்வதற்கான சாலையை, கோடை விடுமுறைக்கு முன்னரே சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் குப்பனூர் சாலை குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆகவே உடனடியாக சேலம் அடிவாரம் – ஏற்காடு சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளனர்.
ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் காட்சி முனைப்பகுதி, சேர்வராயன் கோயில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பிவிட்டதால், பலரும் தங்குவதற்கு இடமில்லாத நிலை உள்ளது. . இன்று மே தினம் விடுமுறை என்பதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.